பண்டிகைகால தள்ளுபடி சலுகைகள் நமக்கு லாபமா... நஷ்டமா?

பண்டிகைகால தள்ளுபடி சலுகைகள் நமக்கு லாபமா... நஷ்டமா?
SRINATH M

தீபாவளி என்றதும் பட்டாசுகள் நினைவுக்கு வரும்; இனிப்புகளின் சுவை நாசியைத் தொடும். அடுத்து நினைவுக்கு வருவது தள்ளுபடிகள்தான். பெரிய நிறுவனங்களின் அடையாளமே தீபாவளி தள்ளுபடியாகத்தான் உள்ளது. இதனை தற்போது அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற ஆன்லைன் நிறுவனங்களும் கையில் எடுத்துள்ளன. தள்ளுபடி விற்பனையில் வாங்குவது உண்மையில் நமது செலவைக் குறைக்கிறதா? அந்தப் பொருட்கள் தரமானவைதானா? தள்ளுபடி விற்பனைகளின் பின்னணியில் உள்ள வியாபார தந்திரங்கள் எவை? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறிதான்!

பண்டிகை காலத்தில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்கலாம் என்ற ஆசையில், பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கித் தள்ளிவிடுகிறார்கள் மக்கள். துணிமணிகள் மட்டுமல்ல, மொபைல் போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அவ்வளவு ஏன், செருப்புகள்கூட தீபாவளிக்கு தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. ஆனால், தரமான பொருட்கள் விற்கப்படுகின்றனவா... தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு, விலையை ஏற்றி பின்னர் இறக்குவது போல் விற்கிறார்களா?

சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பு, விற்க முடியாமல் இருக்கும் துணிமணிகளை தள்ளுபடி தந்து விற்றார்கள். ஆனால், இன்று தீபாவளி தள்ளுபடிக்காகவே பல துணிக்கடைகள் துணிமணிகளை வாங்கி, விற்கின்றன. புதுத் துணிக்கு இவ்வளவு தள்ளுபடியா என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆனால், இங்குதான் இருக்கிறது வியாபாரத் தந்திரம். புதிய துணிமணிகளோடு, விற்க முடியாமல் தேங்கிக் கிடக்கும் பழைய துணிமணிகளையும் கலந்துவிடுவது, சிறிய அளவில் டேமேஜ் ஆன துணிமணிகளை புதிய துணிகளோடு கலந்துவிடுவது போன்ற வேலைகளும் நடக்கத்தான் செய்கின்றன.

புதிய துணிமணிகள் கொள்முதல் செய்யப்படுவதால் லேட்டஸ்ட் டிசைன், ஃபேஷன்கள் கிடைக்கின்றன. ஆனால், 20 சதவீதத்துக்கு மேல் தள்ளுபடி கிடைக்கும் துணி வகைகளில் லேட்டஸ்ட் ஃபேஷனை எதிர்பார்க்கமுடியாது. லேட்டஸ்ட் டிசைன்களுக்கு குறைவான தள்ளுபடியும், பழைய டிசைன்களுக்கு அதிகத் தள்ளுபடியும் தருவது என்றொரு வியாபார டெக்னிக் இருக்கிறது.

தீபாவளி தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பாதகமான விஷயம், திருப்பித் தந்து மாற்றிக்கொள்வது. அளவு பொருந்தவில்லை என சில துணிகளை திருப்பிக் கொண்டு சென்றால், அவற்றை திரும்ப வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.

இதுமாதிரியான சமயங்களில் வாடிக்கையாளர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதால் மனஉளைச்சலுக்கு உள்ளாகிறவர்களும் உண்டு. தவிர, குறிப்பிட்ட நேரத்தில் வந்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கிறார்கள். அந்த நேரத்தில், நாம் சொந்த ஊருக்குச் சென்றுவிடுவோம். ‘திரும்பிப் போய் மாத்தணுமா?’ என்றும் யோசிப்போம். தள்ளுபடியில் வாங்கும்போதே சரியான அளவில், பொருத்தமான பிடித்தமான உடைகளைத் தேர்ந்தெடுத்துவிடுவது நல்லது. பில் போடும்போதே இந்த விஷயத்தில் தெளிவான முடிவை எடுத்துவிடவேண்டும்.

தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக வெளியூர் செல்லும் இடத்தில் எல்லாம் தள்ளுபடியில் வாரிக் குவிக்கவேண்டாம். முன்னணி நிறுவனம், நம்பிக்கையான தள்ளுபடி என்றால் மட்டுமே வெளியூர்களில் வாங்கலாம். அவசரத்தில் ஆசை ஆசையாக வாங்கிவிட்டு, ஊருக்குப் போன பிறகு ஓட்டை விழுந்திருக்கிறது என்று மீண்டும் கிளம்ப முடியாது. எனவே,  வீட்டில் உள்ளவர்களின் தேவை தெரியாமல், அளவு தெரியாமல் எடுத்து அவதிப்படவேண்டாம். உள்ளூரில் வாங்குவதே பொருத்தமானது என்பதை நாம் புரிந்து உணருவதே இல்லை.

பொதுவாக, தள்ளுபடி துணி வகைகளை இரவிலோ அல்லது பளபளவென கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்திலோ எடுக்கவேண்டாம். பகல் நேரங்களில் எடுக்கும் போதுதான் பழைய துணியா, புதுத் துணியா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். மேலும், பளபள வெளிச்சத்தில் அந்தத் துணியின் உண்மையான வண்ணத்தையும் கண்டுபிடிக்க முடியாது.

ஏதோ ஓர் ஆர்வத்தில் வாங்கிவிட்டு, வெளியில் போட்டுச் செல்ல முடியாது. வீட்டில் பயன்படுத்த வேண்டுமானாலும் இவற்றை வாங்கலாம். அதற்காக அதிக டேமேஜ், வெளுத்துபோன துணிகளை வாங்கி, மனைவியிடம் திட்டு வாங்குவது தனி எபிசோடு!

விலையில் தள்ளுபடி என்பது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு மட்டும்தான். 10 முதல் 20 சதவீத தள்ளுபடியைத்தான் பெரும்பாலான கடைகள் தருகின்றன. இது ஓரளவு நியாயமான தள்ளுபடி. ஆனால், 50 சதவீத தள்ளுபடி என்பது விளம்பரத்துக்காகச் சொல்லப்படும் வாசகம் மட்டுமே. அதை நம்பி உள்ளே போனால், ஒப்புக்கு ஒன்றிரண்டு பொருட்களை மட்டுமே 50 சதவீத தள்ளுபடி விலையில் வைத்திருப்பார்கள். மற்றவற்றுக்கு 10-20 சதிவீத தள்ளுபடியே இருக்கும், கவனித்துப் பாருங்களேன்!

துணிகளின் மீது விலைப்பட்டியல் ஒட்டுவதில்தான் இருக்கிறது பலே தந்திரம்! பொதுவாக, இரண்டு வகை விலைப்பட்டை உண்டு. ஒன்று, துணியின் உண்மையான விலை, மற்றொன்று தள்ளுபடிக்காகவே ஒட்டப்பட்ட விலை. 350 ரூபாய் கொண்ட ஒரு புடவையின் விலை தீபாவளி தள்ளுபடியில் 600 ரூபாயாக உயர்ந்து மீண்டும் 350 ரூபாயாக குறையும். இந்த முறையில் தீபாவளிக்கு வாங்கினாலும் சரி, பொங்கலுக்கு வாங்கினாலும் துணியின் விலை மாறவேமாறாது.

கடைக்காரர்கள் பயன்படுத்தும் அடுத்த டெக்னிக், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது. இதற்கு மயங்குகிறவர்கள்தான் நம்மில் பெரும்பாலானவர்கள். யாருமே வாங்க விரும்பாத மோசமான துணியை ஒரு நல்ல துணியோடு சேர்த்து விற்பது இந்த டெக்னிக். ஒரு நல்ல துணி 300 ரூபாய், ஒரு மோசமான துணி 150 ரூபாய் என இந்த இரண்டையும் சேர்த்து, 450 ரூபாய் விற்பார்கள். காசைக் கொடுத்து நல்ல துணியை மட்டும் வாங்குவது புத்திசாலித்தனம்.   

தீபாவளி தள்ளுபடியில் துணி வாங்கும்போது நன்றாக பிரித்துப் பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் இழை இல்லாமல் இருப்பது, சாயம் ஒட்டி இருப்பது போன்றவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியும். கொட்டிக்கிடக்கும் துணிகளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை மிக பழைய ஸ்டாக் ஆக இருக்கும். அதிக டேமேஜும் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!

நீங்கள் வாங்கிய பொருட்களில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதனை ஓரிரு நாட்களில் மாற்றிக்கொள்வது நல்லது. சில கடைகளில் தள்ளுபடி விற்பனையில் வாங்கிய பொருளை மாற்றித்தரமாட்டார்கள். மற்ற நாட்களில் எல்லாம் நிறைய லாபம் வைத்து விற்கும் கடைக்காரர்கள், தீபாவளிக்கு மட்டும் எப்படி இவ்வளவு தள்ளுபடி தருகிறார்கள்?

சில துணிவகைகள், சில அளவுகளில் இருக்கும்போது அதை விற்றுத் தீரவேண்டும் என்பதற்காக தீபாவளி தள்ளுபடி அறிவிக்கிறார்கள். இதனால் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளுக்கு புதிய துணிகளை அவர்களால் வாங்கி வைக்க முடியும். வாடிக்கையாளர்களாகிய நமக்கு ஆடித் தள்ளுபடி தருவது போல, அவர்களுக்கும் சப்ளையர்கள் தருவார்கள்.

முன்பெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு துணிமணிகளும் பட்டாசுகளும் பட்சணங்களும்தான் செம விற்பனையில் இருக்கும். ஆனால், இப்போது எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்கூட அமோகமாக விற்பனை ஆகின்றன. எலெக்ட்ரானிக் பொருட்களை விற்கும் நிறுவனங்களும் இந்த தீபாவளி சீஸனில் தள்ளுபடிகளை வாரி இறைக்கின்றன. குறிப்பாக, ஜீரோ சதவீத வட்டி, குறைந்த முன்பணம், கேஷ் பேக் ஆஃபர் என பல்வேறு சலுகைகளையும் தருகின்றன. இதுவும் தூண்டில் ரகம்தான்!   

ரைஸ் குக்கர், பிரட் டோஸ்டர், அயர்ன் பாக்ஸ், டேபிள் ஃபேன், இன்டக்‌ஷன் ஸ்டவ் போன்ற பொருட்களுக்கும், ஹோம் தியேட்டர் சாதனங்களுக்கும் 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இவை சைனா பிராண்டுகள் எனப்படும் ரகத்தினை சேர்ந்தவையாகவும் இருக்கலாம். இவற்றை உடனடியாக விற்றுவிடுவது நல்லது என்பதால் தீபாவளி தள்ளுபடியில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்.

 தவிர, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களில் புதுப்புது மாடல்கள் அடிக்கடி வருவதால்,  ஏற்கெனவே தேங்கிக் கிடக்கும் பொருட்களை தள்ளிவிடவும், தீபாவளி ஒரு வாய்ப்பு அவர்களுக்கு! தீபாவளி தள்ளுபடியில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கும்போது குறைந்தபட்சம் ஒன்றுக்கு இரண்டு முறையாவது பொருட்களை செக் செய்து வாங்குவது நல்லது.

ஜீரோ வட்டி என்கிற விஷயங்கள், குறிப்பிட்ட சில நிறுவனங்கள், சில குறிப்பிட்ட பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க எடுக்கும் நடவடிக்கைதான். இஎம்ஐ. தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என்பது உண்மைதான். சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனமும், பிராண்டும் சேர்ந்து ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய வட்டியைத் தருவதாகச் சொல்கின்றனர். ஆனால், பிராசஸிங் கட்டணம் என ஒரு குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளரை கட்டச் சொல்வதால் ஒரு வகையில் இது மறைமுகமாக வாடிக்கையாளரை ஏமாற்றும் வேலைதான். ஆனால், பிராசஸிங் கட்டணம் வாங்காமல் ஜீரோ வட்டிச் சலுகை என்றால் வாடிக்கையாளருக்கு ஆதாயம் என்று சொல்லலாம்.

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை தள்ளுபடியில் வாங்குவதற்கு முன்னர் தயாரிப்பு தேதி மற்றும் மாடலை கவனிக்க வேண்டியது முக்கியம். பொதுவாக, தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டரை வருடங்களுக்கு மட்டுமே அந்தந்த மாடல்களுக்கான உதிரிப்பாகங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். மேலும், நிறுவனங்கள் தரும் கியாரண்டி இந்த இரண்டரை வருடங்களுக்கு உத்தரவாதமாக நம்பலாம். இடைப்பட்ட காலத்தில் புதிய மாடல்களும் வந்துவிடும் என்பதால் பழைய மாடல்களுக்கு அதிக தள்ளுபடி தந்து விற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனினும், உதிரிப்பாகங்கள் மற்றும் சர்வீஸ் தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.  

கடந்த பத்து வருடங்களாக, தீபாவளி பர்ச்சேஸில் செல்போனும் முக்கிய இடம்பிடித்துவிட்டது. பழைய மாடல் செல்போன்களுக்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்கிற வகையில் தீபாவளி தள்ளுபடியில் அமர்க்கள விற்பனை நடக்கிறது. அதேபோல ஷூ மற்றும் செருப்புக் கடைகளும் தற்போது 50 சதவீதம் வரை தள்ளுபடி தந்து அசத்துகின்றன.  ஆனால், புதிதாக வந்திருக்கும் காலணிகளுக்கு எந்த தள்ளுபடியும் தரப்படுவதில்லை என்பதைக் கவனித்தால் எளிதில் புரியும்!

 நமது கண்ணே நம்மை ஏமாற்றிவிடும் என்கிற அளவுக்கு தள்ளுபடி கொண்டாட்டம் கனஜோராக நடந்துகொண்டிருக்கிறது. தள்ளுபடியில் பொருட்கள் வாங்குவது என்பது நமக்கு லாபமானது என்று கொண்டாடவும் வேண்டாம்; ஏமாற்றம் என்று தள்ளவும் வேண்டாம். இடம், பொருள் பார்த்து, தரம் பிரித்து வாங்கினால் தள்ளுபடியிலும் நல்ல வரும்படியைப் பார்க்கலாம். பர்ச்சேஸ் கூட்டத்தில் மட்டுமல்ல... பர்ச்சேஸ் செய்வதிலும் பர்ஸ் பத்திரமாக இருக்கட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in