அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் குண்டர்களா?: ஓபிஎஸ்சுக்கு உதயகுமார் கேள்வி

செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார்
செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார்

பதவி மீது ஆசை இல்லை என்று கூறியவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து தொண்டர்களைக் காயப்படுத்தியது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார், "மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற கிராமத்து பழமொழி போல, பன்னீர்செல்வம் குழப்பமான மனநிலையில், வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக குண்டர்கள் என்று பேசுகிறார்.

தொண்டர்களின் கோயிலாக உள்ள தலைமைக் கழகத்தை, யார் குண்டர்களுடன் வந்து சர்வநாசம் செய்தது என்று அனைவருக்கும் தெரியும். நடைபெற்ற பொதுக்குழுவில் ராணுவ கட்டுப்பாட்டுடன் கழகத்தினர் இருந்தனர், பொதுக்குழுவில் எந்த சலசலப்பும் கிடையாது.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மீது திருட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது, இதுதான் அவரின் லட்சணம். பன்னீர்செல்வம் கருத்துக்களால் தொண்டர்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர். முதலமைச்சர் பதவி மீதும், தலைவர் பதவி மீதும் ஆசை இல்லை என்று கூறுகிறார், அப்படி என்றால் உரிமையில் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மறுபடியும் உயர்நீதிமன்றம் சென்று மனுத் தாக்கல் செய்தது ஏன்? இப்படி வழக்கு தொடுப்பது மூலம் தொண்டர்கள் மன வேதனையிலும், கடுமையான மன உளைச்சலிலும் உள்ளார்கள்" என்றார்.

தொடர்ந்து, "பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன, இது மிகவும் அபாயமான சூழலாக உள்ளது. முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு உரிய நடவடிக்கை எடுத்தாலே போதும். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை மானியக் கோரிக்கையில், சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்து இரண்டரை மணிநேரம் அவல நிலையை விளக்கிப் பேசினார். தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி குறித்தும், போதைப்பொருட்கள் அதிகரித்து வருவதையும் அரசுக்கு கூறுகிறார். ஆனால், தமிழக அரசு கும்பகர்ணனை போல் தூங்குகிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in