விபத்து மரணங்கள் மறைக்கப்படுகிறதா?- சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் பதில்

விபத்து மரணங்கள் மறைக்கப்படுகிறதா?- சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் பதில்

``ஊடங்கங்களில் வருவது போல் சென்னை போக்குவரத்து காவல்துறை சாலை விபத்துகளை குறைத்துக் காட்டவில்லை'' என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் கூறினார்.

சென்னை மாநகரில் பதிவு எண் இல்லாமலும், பழுதடைந்த பதிவு எண்ணுடன் வாகனங்கள் இயங்குவதாக சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அப்புகார்களின் அடிப்படையில், சென்னை போக்குவரத்து காவல்துறை மூலம் கடந்த 4 நாட்கள் சிறப்பு தணிக்கை நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கையின் மூலம், பதிவு எண் இல்லாமலும், பழுதடைந்த பதிவு எண்ணுடன் வந்த வாகனங்கள் தொடர்பாக 800-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த சிறப்பு தணிக்கை தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை போக்குவரத்து காவல்துறை நடத்திய இந்த சிறப்பு தணிக்கையில் மொத்தம் 828 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டதில் 98% இருசக்கர வாகனங்களில் முறையாக பதிவு எண் இல்லாமலும், பழுதடைந்த பதிவு எண்களுடன் வாகனத்தை ஓட்டிய நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, பதிவு எண் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குற்றப் பின்னணி உள்ளதா?. சம்மந்தப்பட்ட வாகனம் குற்ற வழக்குகளில் தொடர்புடையதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் அவ்வாறு எதுவும் கண்டறியப்படவில்லை. பதிவு எண் பொருத்துவது கட்டாயமாக்கப்படுவதன் மூலம், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிவதும், விபத்து ஏற்படும் போது சம்மந்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காண்பதும் எளிமையாகும். ஆகவே இந்த சிறப்பு தணிக்கையை தொடர்ந்து நடத்தப்படும்.

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பாக தினசரி 100 வழக்குகள் வீதம் வருடத்திற்கு 1 லட்சத்து 25 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அனைத்து போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக தினசரி 8 ஆயிரம் வழக்குகள் வரை போடப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்பதால், வாகனத்தின் மதிப்பே அவ்வளவு வராது என்று சில உரிமையாளர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுச் செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. சாலை விபத்தில் ஏற்படும் மரணங்கள் மறைக்கப்படுவதாக செய்திகளில் வரும் தகவல்கள் சென்னைக்கு பொருந்தாது. சென்னை காவல்துறை சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணங்களை மறைக்கவோ, குறைத்து காட்டவோ இல்லை. குறிப்பாக ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்கள் பிரிந்த பின்னர் சென்னையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 50 இறப்புகள் குறைந்துள்ளன. சாலை விதிமீறல்கள் தொடர்பான அபராதத்தை வசூலிக்க Paytm பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்ட QR Code முறை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. Paytm-ன் 4.5 லட்சம் பயன்பாட்டாளர்களுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் மூலம் அபராதத் தொகை குறித்து நினைவூட்டி வருகிறோம். Paytm QR Code-ஐ பயன்படுத்தி இதுவரை 3-4% பேர் அபராதத் தொகையை செலுத்தியுள்ளனர்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in