5 லட்சம் கொடுத்தால்தான் ஆய்வறிக்கை; பேரம் பேசிய பெண் தொல்லியல் வல்லுநர் கையும் களவுமாக சிக்கினார்!

மூர்த்தீஸ்வரி
மூர்த்தீஸ்வரி

கோயில் திருப்பணி தொடங்குவதற்கு உரிய ஆய்வறிக்கை அளிக்க வேண்டிய குழுவில் உள்ள தொல்லியல் துறை வல்லுநர்,  அதற்காக 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் அவரை பொறி வைத்து பிடித்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் குணசீலத்தைச் சேர்ந்த அரங்கநாதன் மகன் பிச்சுமணி ஐயங்கார். இவர் பிரசித்தி பெற்ற குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில் பரம்பரை நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த கோயிலுக்கு தற்போது உபயோதாரர்கள் மூலமாக திருப்பணி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து அறநிலையத் துறையில் பெற்றுள்ள நிலையில் அதற்கு மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மாநில அளவிலான வல்லுநர் குழுவில்  ஆய்வறிக்கை பெற வேண்டியிருந்தது. அந்த குழுவினரும்  கடந்த  2.6.2022 அன்று  மேற்படி கோயிலில் ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகும் ஆய்வறிக்கை  கிடைக்கப் பெறவில்லையாம். அதனால் குழுவினரை திரும்பவும் தொடர்பு கொண்டு கோயில் தரப்பில் ஆய்வறிக்கை கேட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கமிட்டியின் உறுப்பினரும்,  தொல்லியல் துறை வல்லுநருமான மூர்த்தீஸ்வரி என்பவர் கடந்த 12.10.2022 அன்று கோயிலுக்கு வந்து  10 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால்தான் கமிட்டியிலிருந்து ஆய்வறிக்கை வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு  கோயில் தரப்பில் பேசிய பிச்சுமணி ஐயங்கார் பத்து லட்ச ரூபாய் அதிகமாக உள்ளதாகவும் இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஐந்து லட்ச ரூபாய்  குறைத்துக் கொண்டு மீதி ஐந்து லட்ச ரூபாயாவது  கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்று கறார் காட்டிய மூர்த்தீஸ்வரி  முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறு  கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி  மணிகண்டனிடம்  இதுகுறித்து புகார் அளித்தார்.

இதனையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை  பிச்சுமணி ஐயங்காரிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதனை மூர்த்தீஸ்வரியிடம்  கொடுக்குமாறு கூறினர். அவ்வாறே  மூர்த்தீஸ்வரியிடம்  சென்று ஒரு லட்ச ரூபாய் முன்பணத்தை பிச்சுமணி ஐயங்கார்  கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோயில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோயில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும்  தெரிய வந்திருக்கிறது.  

மேலும் மூர்த்தீஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில்  கணக்கில் வராத ஐந்து லட்ச ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in