
நீலகிரி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய காவலர் மதுரையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை தத்தனேரி கீழ வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த ராமசாமியின் மகன் மகாலிங்கம்(31). இவர் நீலகிரி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மதுரை தத்தனேரியில் உள்ள வீட்டின் மாடி அறையில் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் நேரில் சென்ற செல்லூர் காவல்துறையினர் மகாலிங்கம் உடலை மீட்டு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், மகாலிங்கம் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மகாலிங்கம் நீலகிரி மாவட்டம் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்துக்கு விடுப்பில் வந்தவர், மீண்டும் பணிக்குச் செல்லவில்லை என தெரிகிறது. மேலும், இவர் பணிக்குச்செல்லாததால் ஆறு மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி ரம்யா மகாலிங்கத்தைப் பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் கடந்த 6 மாதங்களாக மதுப்பழக்கத்துக்கு ஆளாகி தினமும் மது அருந்தியுள்ளார். இச்சூழலில், மன உளைச்சல் அதிகமானதால் மாடியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.