அனைவராலும் பாராட்டப்பட்டவர் இன்று சஸ்பெண்ட்: விபரீத செயலால் தலைமைக் காவலருக்கு நடந்த துயரம்

2020 ல் பாராட்டப்பட்ட லிங்கேஷ்
2020 ல் பாராட்டப்பட்ட லிங்கேஷ் கோப்புப்படம்

சாலையோரத்தில் இறந்து கிடந்த பிச்சைக்காரரை அடக்கம் செய்ததற்காக காவல்துறை உயர் அதிகாரிகளால் உச்சிமுகர்ந்து பாராட்டப்பட்ட தலைமைக் காவலர் ஒருவர், இப்போது குற்றப் பின்னணி கும்பலுக்கு உடந்தையாக இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் லிங்கேஷ். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி, அந்தப் பகுதியில் தர்மம் எடுத்து வாழ்க்கையை ஒட்டிய பிச்சைக்காரர் ஒருவர் இறந்து கிடப்பதைப் பார்த்தார். இதைப் பார்த்ததும் தலைமைக் காவலர் லிங்கேஷ் தன் சொந்த செலவில் அந்த பிச்சைக்காரரை அடக்கம் செய்தார். இது சமூகவலைதளங்களில் அப்போது அவருக்கு பெரும் பாராட்டையும் பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செம்மண் கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தார். அப்போது அஞ்சுகிராமம் தலைமைக் காவலர் லிங்கேஷிற்கு செம்மண் கடத்தல் கும்பலோடு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமைக் காவலர் லிங்கேஷை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து, மாவட்ட எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in