
உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணாவின் பதவிகாலம் ஆகஸ்ட் 26ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனால், பதவி விலகும் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் பரிந்துரையை ஏற்று, நீதிபதி உதய் உமேஷ் லலித்தை இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக (CJI) ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்துள்ளார். யு.யு.லலித் ஆகஸ்ட் 27 ம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் எனவும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
1957ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் பிறந்த யு.யு.லலித் 1983 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் 2014 ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். யு.யு.லலித் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலம் மட்டுமே பதவியில் இருப்பார். நவம்பர் 8ம் தேதியுடன் 65 வயது ஆவதால் பணி ஓய்வு பெறவுள்ள இவர், அதுவரை இந்த பதவியில் இருப்பார்.