ஆசிரியர் கனவில் இருப்பவரா நீங்கள்?: இன்று முதல் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் கனவில் இருப்பவரா நீங்கள்?: இன்று முதல் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அந்த பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. இந்த பணி நியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஆசிரியர்களை நியமனம் செய்வதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. அதையடுத்து உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடந்த 2-ம் தேதியன்று பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டார்.

அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், இல்லம் தேடிக் கல்வியில் உள்ள தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், முதுகலை ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பள்ளி அமைந்துள்ள ஊராட்சி எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள், அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் விவரங்கள் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல் தெரிவிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து விண்ணப்பிக்கும் நபர்களுக்கான மாதிரி விண்ணப்ப படிவங்கள், அடங்கிய விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II தேர்ச்சி பெற வேண்டும். முதுகலை ஆசிரியர் பதவிக்கு அரசாணை (நிலை) எண்:14ன்படி வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் இருக்க வேண்டும்.

இத்தகைய தகுதியுள்ள நபர்கள் இன்று முதல் 6-ம் தேதி மாலை ஐந்து மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரத்தை வரும் 6-ம் தேதி இரவுக்குள் ஆணையரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in