ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் 24 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தும், 23 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள அனுமதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், அணிவகுப்புக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பிறகு அந்த உத்தரவில் மாற்றம் செய்து சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு என்றும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர்.

மேலும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அமைப்புகளுக்கு போராட்டங்கள் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 500 போராட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தனர். தற்போது குறிப்பிட்ட தேதியில் காவல்துறை அனுமதி வழங்குவதாக கூறினால், அதை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். தமிழக காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனக்கு மனு நகல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதால் மனு நகல் பெற்று அதற்கு விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனு நகலை வழங்கும்படி மனுதாரர்கள் தரப்புக்கு உத்தரவிட்டு, மனுவுக்குப் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டனர்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், ஜனவரி 22 மற்றும் 29-ம் தேதிகளில் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாகவும், அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்எஸ்எஸ் தரப்பில் அளிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து  உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜன.5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in