பட்டா மாற்றம் செய்ய 3 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்

பட்டா மாற்றம் செய்ய 3 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருத்தாசலம் விஎன்ஆர்  நகரில் வசித்து வருபவர்  சுப்பிரமணியன்.  இவர் விருத்தாச்சலம் அருகே ரூபநாராயணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.  அப்பகுதியை சேர்ந்த  விவசாயிகள் பட்டா மாற்றம் உள்ளிட்டத்திற்காக இவரை அணுகினால் லஞ்சம் கேட்பதை வழக்கமாக வைத்திருந்தாராம்.

இந்த நிலையில் அதே ஊரைச்சேர்ந்த ராமதாஸ் என்பவர் பட்டா மாற்றத்திற்காக விண்ணப்பித்து விட்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியனை  அணுகியுள்ளார். பட்டா மாற்றம் செய்ய தனக்கு  ரூபாய் 3000 லஞ்சம் தர வேண்டும் என்று சுப்பிரமணியன்  கேட்டுள்ளார்.  ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமதாஸ் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில்  இது குறித்து புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் ராமதாஸ் இன்று பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்று சுப்பிரமணியனிடம் 3000 ரூபாயை கொடுத்துள்ளார். அப்பொழுது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்  அவரை கையும் களவுமாகப்  பிடித்தனர்.  அவரிடம் சோதனையிட்டபோது ராமதாஸ் கொடுத்த 3000 ரூபாயுடன் சேர்த்து மொத்தம்  14,000  ரூபாய் கையிருப்பில் இருந்துள்ளது. அந்த தொகையும் மேலும்  ஆறு பேரிடம் லஞ்சமாக வாங்கிய பணம் என  விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து சுப்பிரமணியத்தை  அவர் வசிக்கும் விஎன்ஆர் நகரில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து அவர் வீட்டையும் சோதனையிட்டனர். அதைத் தொடர்ந்து விசாரணைக்காக கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த ஓராண்டில் கடலூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய  அரசு ஊழியர்கள் 10 பேரை  லஞ்ச ஒழிப்புத் துறையினர்  கைது செய்துள்ளனர். இதில் ஒன்பது வழக்குகளில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in