சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை: லட்சக்கணக்கில் சிக்கியது பணம்!

 பணம்
பணம்

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 7 மணியளவில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். 5 மணிநேரமாக நடந்த இந்தச் சோதனையில் கணக்கில் வராத நான்கரை லட்சம் ரூபாய் சிக்கியது.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு செய்வதற்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் கைமாறுவதாக குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி பீட்டர் பாலுக்கு புகார் சென்றது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 7 மணியளவில் பீட்டர் பால் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்தனர். அப்போது நடத்திய சோதனையில் அங்கிருந்த ஒரு அறையில் மேஜை ஒன்றில் கணக்கில் வராத 4,52,800 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதில் இரணியல் (பொறுப்பு) சார்பதிவாளர் சுப்பையா, அலுவலக ஊழியர்கள் நான்குபேர், புரோக்கர்கள் 6 பேர் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெள்ளிக்கிழமையான நேற்று நல்ல நாள் என்பதால் ஏராளமான பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம். இதனாலேயே இரணியல் சார்பதிவாளரை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டு, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவி சார்பதிவாளராக பணியாற்றும், சுப்பையாவை இங்கே அனுப்பி வசூல் வேட்டை நடத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in