
கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த சில மாதங்களாக பல்வேறு அரசு துறைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத பணம் மட்டும் ஆவணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று மாலை ஐந்து மணி முதல் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூரில் திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவு துறையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி முதல் சோதனை நடைபெற்று வரும் நிலையில் உள்ளிருக்கும் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியில் இருக்கும் நபர்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இதேபோல கடலூர் மாவட்டத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணங்கள் கைப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.