5 லட்சம் தந்தால்தான் கல்குவாரிக்கு அனுமதி: துணிகரமாக லஞ்சம் கேட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் சிக்கினார்

உதவி இயக்குநர் ஶ்ரீதரன்
உதவி இயக்குநர் ஶ்ரீதரன்5 லட்சம் தந்தால்தான் கல்குவாரிக்கு அனுமதி: துணிகரமாக லஞ்சம் கேட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் சிக்கினார்

திருச்சி அருகே கல்குவாரி அமைப்பதற்காக 5 லட்சம் ரூபாய்  லஞ்சம் கேட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர்,  லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் கையும் களவுமாக சிக்கினார். 

திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும்  இவருக்கு திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பூலான்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி அமைக்க அனுமதி வேண்டி கடந்த 2-6-2022 அன்று திருச்சி கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இவரது விண்ணப்பம் முசிறி வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டு கள ஆய்வு செய்து மீண்டும் கனிம வளத்துறை  உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து  மூன்று மாதங்கள் ஆகியும் உதவி இயக்குநர் அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால்  ஆல்பர்ட் நேரில் சென்று உதவி இயக்குநர் ஸ்ரீதரன் என்பவரை சந்தித்து தனக்கு கல்குவாரி அமைக்க அனுமதி வேண்டும் என கேட்டுள்ளார். 

இதனையடுத்து  கடந்த 7-ம் தேதியன்று  பூலாஞ்சேரி சென்று ஆல்பர்ட்டின் இடத்தை  ஶ்ரீதரன் ஆய்வு செய்துள்ளார்.  அதன்பிறகு கல்குவாரி அமைக்க அனுமதி தர வேண்டும் என்றால் ஐந்து லட்ச ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு முன் பணமாக மூன்று லட்ச ரூபாயை நேற்று கொண்டு வந்து தர வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆல்பர்ட், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை  டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். அவர்களின் ஆலோசனையின்  பேரில், ஆல்பர்ட் நேற்று  திருச்சி, உதவி இயக்குநர், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம்  சென்று அங்கிருந்த  உதவி இயக்குநர் ஸ்ரீதரனிடம்  3 லட்சம் ரூபாய் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரை  கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in