
மிகப்பெரும் நிலநடுக்கத்துக்கு ஆளான துருக்கியின் துயரம் முழுமையாக விலகுவதற்குள், இரண்டாம் நாளில் 5.9 ரிக்டர் அளவிலான இன்னொடு நிலநடுக்கம் அங்கே எழுந்ததில் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.
திங்களன்று அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு துருக்கி ஆளானது. அதன் எல்லையிலிருக்கும் சிரியாவிலும் இதன் பாதிப்புகளும், உயிர்ப்பலிகளும் உயர்ந்தன. நிலத்தடியில் சுமார் 18 கிமீ ஆழத்தில் நிகழ்ந்த பூகம்பத்தை தொடர்ந்து 2 தேசங்களும் கடும் நிலநடுக்கத்தை எதிர்கொண்டன. தொடர்ந்து சுமார் 40க்கும் மேலான அதிர்வுகளும் எழுந்ததில் துருக்கி மற்றும் சிரிய மக்கள் பீதிக்கு ஆளானார்கள்.
அதிகாலையில் மக்கள் அனைவரும் தூக்கத்தில் ஆழ்ந்தபோது நிகழ்ந்த நிலநடுக்கத்தால், உயிர் பிழைக்க வாய்ப்பின்றி கட்டிட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கினார்கள். நிலநடுக்கத்தால் குலைந்த கட்டிடங்கள் அடுத்தடுத்த அதிர்வுகளில், நாள் முழுக்க இடிந்து விழுந்தபடி இருந்தன. ஒரே நாளில் ரிக்டர் ஸ்கேலில் 7.8, 7.6 மற்றும் 6.0 என 3 நிலநடுக்கங்களுக்கு துருக்கி ஆளானது. இந்த வகையில் சிரியாவைவிட அதிக இன்னல்களுக்கு துருக்கி ஆளானது.
கடும் குளிர், தொடரும் நிலநடுக்க அபாயம் காரணமாக வீடற்ற மக்கள் சாலைகளிலும், திறந்தவெளிகளும் உயிரச்சத்தோடு தவிக்கின்றனர். துருக்கியில் மட்டும் உயிர்ப் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர் அதிர்வுகள் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரும், மருத்துவப் பணியாளர்களும் கலக்கத்துடன் தவித்து வருகின்றனர். உற்றாரை இழந்த மனிதர்கள் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக, ஒரே இரவில் தெருவுக்கு வந்த மக்கள் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர்.
இவற்றின் மத்தியில் இரண்டாவது நாளான இன்றும்(பிப்.7) 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு துருக்கி ஆளாகி உள்ளது. இதன் காரணமாக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளை மொத்தமாக துறந்து, கொல்லும் குளிர் மத்தியில் திறந்த வெளிகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் மீட்பு பணிகளில் தாமதம் போன்றவை துருக்கி தேசத்துக்கு பெரும் சவாலை எழுப்பி உள்ளன. இவற்றின் ஊடாக மீண்டும் நிலநடுக்கத்துக்கு வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்களும் துருக்கியின் துயரத்தை அதிகரித்துள்ளன.