முதலில் கசாயம் கொடுத்தார், பிறகு குளிர்பானம் கொடுத்தார்: காதலியால் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்த காதலன்

முதலில் கசாயம் கொடுத்தார், பிறகு குளிர்பானம் கொடுத்தார்: காதலியால் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்த காதலன்

குமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் குளிர்பானம் குடித்து, உறுப்புகள் செயல் இழந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது அதேபோல் இன்னொரு மரணம் கேரளத்தில் நிகழ்த்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகில் உள்ளது மெதுகும்மல். இங்குள்ள சுனில்-சோபியா தம்பதியின் மூத்த மகன் அஸ்வின். இவர் குழித்துறை அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் வைத்து நண்பகலில் ஒரு மாணவர் அஸ்வினுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். அதை அஸ்வினும் வாங்கிக் குடித்துள்ளார். வீட்டிற்குச் சென்றதும் அஸ்வினுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.இதில் சிகிச்சைக்கு சேர்ந்த அஸ்வினுக்கு முதலில் இரு சிறுநீரகங்களும் செயல் இழந்தது. தொடர்ந்து இருவார சிகிச்சைக்குப் பின்பு சிறுவன் உயிர் இழந்தார்.

இதேபோல் கேரளத்தில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரளத்தின் பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ். இவர் குமரிமாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு படித்து வந்தார். பேருந்துப் பயணத்தின் போது இவருக்கு ஒரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது காதலானது. ஷாரோன்ராஜூடன் காதலுக்கு, அந்தப் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 14- ம் தேதி ஷாரோன் தன் நண்பன் ரெஜின் என்பவரோடு சேர்ந்து தன் காதலியை சந்திக்க ராமன்சிரா பகுதியில் உள்ள அவர் வீட்டிற்குச் சென்றார்.

அப்போது அவரது காதலி ஏதோ ஒரு கசாயம் குடித்துக்கொண்டு இருந்திருக்கிறார். அதை வாங்கிக்குடித்த ஷாரோன், அந்த கசாயம் கசப்பதாக தன் காதலியிடம் சொன்னார். உடனே, அந்தப் பெண் ஷாரோனுக்கு ஒரு குளிர்பானத்தைக் குடிக்கக் கொடுத்தார்.

அதை குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மறுநாள் ஷாரோனுக்கு வாயில் புண் ஏற்பட்டது. தொடர்ந்து ஷாரோனுக்கு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷாரோன் உயிர் இழந்தார். இதேபோல் தான் அஸ்வின் சம்பவத்திலும் நடந்தது. கேரளத்தில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கும் பாறசாலை பகுதி, குமரிமாவட்டத்தை ஒட்டிய பகுதியாகும். இதுகுறித்து பாறசாலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கில் ஷாரோனுடன் அவரது காதலி வீட்டிற்குச் சென்ற ரெஜின், ஷாரோன் காதலி வீட்டில் இருந்து வெளியில் வந்ததும் வாந்தி எடுத்ததாக கூறியுள்ளார். இதேபோல் ஷாரோன் தன் காதலியிடம் உரையாடிய ஆடியோ, வாட்ஸ் அப் மெசேஜ்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் அந்த பெண் தன் உடல் பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக கசாயம் குடித்து வந்ததும், பத்தியத்தில் அன்று கடைசிநாள். அந்த கசாயத்தைப் பார்த்ததும் ஷாரோன் எடுத்துக் குடித்தது தெரியவந்தது. அந்த உரையாடலிலேயே ஷாரோன், தனக்கு உடலில் ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகியிருப்பதாகவும், கசாயம் கொடுத்த இடத்திலேயே சொல்லி மருந்து வாங்கிதரும்மாறும் உரையாடி இருக்கிறார்.

கசாயத்தால் ஷாரோனுக்கு இந்த சிக்கல் ஏற்பட்டதா அல்லது அதனைத் தொடர்ந்து குடித்த குளிர்பானத்தால் இந்த நிலை ஏற்பட்டதா என்பது குறித்தும் பாறசாலை போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதபரிசோதனை அறிக்கை வந்த பின் தான் எதனால் ஷாரோன் உயிரிழந்தார் என்பது தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in