வழக்கை வாபஸ் வாங்கு; வீடு புகுந்து தாக்கிய கும்பல்: கட்டிவைத்து தாக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் கொடுமை

கும்பல் அட்டகாசம்
கும்பல் அட்டகாசம் வழக்கை வாபஸ் வாங்கு; வீடு புகுந்து தாக்கிய கும்பல்: கட்டிவைத்து தாக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் கொடுமை

குமரி மாவட்டத்தில் ஆட்டோக்காரர்களால் மின்கம்பத்தில் கட்டி வைத்து கலா என்ற பெண் தாக்கப்பட்டு இருந்தார். அவர் கொடுத்த புகாரை வாபஸ் பெறக்கோரி அவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி, வீடும் சூறையாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் அருகில் உள்ள வட்டவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் கலா(35). இவரது கணவர் இறந்துவிட்டதால் தாயுடன் வசித்துவந்தார். இவரது தாயார் மேல்புறம் பகுதியில் உள்ள தனியார் பார் ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலைசெய்து வருகிறார். அங்கு சென்று அவ்வப்போது கலாவும் தாய்க்கு உதவுவது வழக்கம். இந்தநிலையில் இவர் மேல்புறம் சந்திப்பு வழியாக செல்லும்போதெல்லாம் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அவரைக் கேலி செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். கடந்த 9-ம் தேதியும், அவர்கள் கேலிசெய்ய இளம்பெண் வீட்டுக்குப் போய் கத்தியை எடுத்துவந்து ஆட்டோ டிரைவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

இதில் கோபம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அந்தப் பெண்ணை அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டிவைத்தனர். அந்த வழியாகச் சென்ற வாலிபர்கள் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். அதுகுறித்துத் தகவல் தெரிந்ததும், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை மீட்டனர். மேலும் பெண்ணைக் கட்டிவைத்த ஆட்டோ ஓட்டுநர்கள் மேல்புறத்தைச் சேர்ந்த சசி(47), வினோத்(44), பாகோடு பகுதியைச் சேர்ந்த திபின், விஜயகாந்த், அரவிந்த் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்கள் மீது பெண்ணை தடுத்து நிறுத்தியது, தகாதவார்த்தையில் பேசியது, அவமானப்படுத்தியது, மிரட்டல் விடுத்தது ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் சசி, வினோத், விஜயகாந்த் ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸார், தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் தேடிவருகின்றனர்.

இந்தநிலையில் வழக்கை வாபஸ் பெறக்கோரி ஒரு மர்மக்கும்பல் கலா வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி தாக்கியது. மேலும் அவரது வீட்டையும் சூறையாடியது. இதில் தாக்குதலுக்கு உள்ளான கலா குழித்துறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு நேற்று இரவு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இளம்பெண்ணைக் கட்டிவைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக வழக்கை வாபஸ் பெறக்கோரி வீடு புகுந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருப்பதாக மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in