
ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு உலக பிரசித்தி பெற்றதான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழாவானது தற்போது தொடங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திரன் சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று அன்னாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக பெரிதாக நடைபெறாமல் சாதாரணமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு அன்னாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடத்த ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை அன்று கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேங்களுடன் விழாவானது தொடங்கியது. நேற்று சனிக்கிழமை மகா அபிஷேகம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான அன்னாபிஷேக விழாவானது இன்று காலை 6 மணிக்கு தொடங்கியுள்ளது. தற்போது அன்னாபிஷேகத்துக்காக 100 மூட்டை அதாவது 2500 கிலோ பச்சரிசியை கொண்டு பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட நீராவி அடுப்பைக் கொண்டு கோயில் வளாகத்தில் சாதம் வடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடிக்கப்பட்ட சாதம் எந்திரம் மூலம் கருவறைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அந்த சாதத்தை 60 அடி சுற்றளவும் 13.5 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லினால் ஆன ஆசியாவிலேயே மிகப்பெரிய லிங்கமான இந்த சிவலிங்கத்திற்கு சார்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு சார்த்தப்படும் ஒவ்வொரு சாதமும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் தன்மையைக் கொண்டதாக கருதப்படும். இதனால் கோடிக்கணக்கான லிங்கத்தை ஒரே நேரத்தில் தரிசிப்பது கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இப்படி தொடர்ந்து சிவலிங்கத்திற்கு சாதம் சார்த்தும் பணிகள் நடைபெற்று முடிந்து மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பிரகதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாளிக்க உள்ளார். இன்றைய தினம் சரியாக மாலை 6 மணிக்கு மஹா பஞ்ச தீபாராதனையும், 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மீதம் உள்ள சாதத்தினை இங்கு இருக்கக்கூடிய ஆறு, ஏரி குளங்களில் மீன்களுக்கு உணவாகவும் அளிக்கப்படுகிறது.
இதனைக் காண்பதற்காகவும், பங்கேற்பதற்காகவும் அரியலூர், தஞ்சாவூர், கடலூர் பாண்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவனடியார் பெருமக்கள் மற்றும் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள். பக்தர்கள் நலன் கருதி 300-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அன்னாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலையத்துறை மற்றும் காஞ்சி சங்கர மட அன்னாபிஷேக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.