பதவி விலகினார் அனில் அம்பானி: காரணம் இதுதான்?

பதவி விலகினார் அனில் அம்பானி: காரணம் இதுதான்?

ரிலையன்ஸ் பவர், ரிலையன்ல் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களின் இயக்குநர் பதவியிலிருந்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி இன்று விலகியுள்ளார். செபி உத்தரவை ஏற்று அவர் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் மறைவுக்கு பின், அவரது வாரிசுகளான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் சொத்தை பிரித்துக் கொண்டனர். இதைத் தொடர்டந்து, முகேஷ் அம்பானி புதிய, புதிய தொழில்களை தொடங்கி பணத்தை குவித்து வருகிறார். அதேசமயம், அனில் அம்பானி தொடங்கிய ரிலையன்ஸ் பவர் நிறுவனம் முதல் பல தொழில்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் சொத்துகளை விற்று கடனை அடைக்க அனில் அம்பானி முயன்று வருகிறார். இதனிடையே, எரிக்ஸன் நிறுவனத்துக்கு கடன் தொகையை செலுத்த வேண்டிய வழக்கில் உச்ச நீதிமன்ற கெடு விதித்ததையடுத்து அனில் அம்பானி சிறை செல்வதை தவிர்க்க முகேஷ் அம்பானி 260 கோடி ரூபாய் கொடுத்து உதவினார்.

இந்நிலையில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்துக்கு பங்குச்சந்தை மற்றும் பாண்டு வெளியீடு உட்பட செக்யூரிட்டீஸ் சந்தையில் பங்கு பெற தடை விதித்து செபி உத்தரவிட்டது. அனில் அம்பானியின் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் தனது தவறான தகவல்களை தந்ததாகவும், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பணத்தை எடுத்து அதனை வேறு செலவுகளுக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறி தடை விதித்தது செபி. மேலும், அனில் அம்பானி உள்பட தடை விதிக்கப்பட்ட நபர்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பதவிகளில் தொடரக்கூடாது எனவும் செபி அறிவித்தது.

இந்நிலையில் ரிலையன்ஸ் பவர், ரிலையன்ல் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களின் இயக்குநர் பதவியிலிருந்து அனில் அம்பானி இன்று விலகியுள்ளார். இதுகுறித்து ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மும்பை பங்கு சந்தையிடம் அளித்துள்ள அறிக்கையில், ‘‘பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் விதித்த இடைக்கால உத்தரவின்படி, நிர்வாகம் சாராத இயக்குநர் பதவியை வகித்து வந்த அனில் அம்பானி, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து விலகியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானி விலகலால் ரிலையன்ஸ் கட்டுமானம், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு கூடுதல் இயக்குநராக ராகுல் சரின் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு கூடுதல் இயக்குநராக ராகுல் சரின் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in