பணிமாறுதல் செய்ததால் ஆத்திரம்: துப்பாக்கி ஆயிலை உணவில் கலந்த பெண்ணால் பரபரப்பு

உணவில்   'விண்டர்கிரீன்' என்னும் தைலத்தை கலந்த பெண்.
உணவில் 'விண்டர்கிரீன்' என்னும் தைலத்தை கலந்த பெண்.பணிமாறுதல் செய்ததால் ஆத்திரம்: துப்பாக்கி ஆயிலை உணவில் கலந்த பெண்ணால் பரபரப்பு

தன் தவறைக் கண்டுபிடித்து பணியிடமாற்றம் செய்ததால் கோபமடைந்த பெண், துப்பாக்கித் துடைக்க பயன்படுத்தும் தைலத்தை உணவில் கலந்து சக ஊழியர்களுக்குக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செண்பகனூர் பகுதியைச் சேர்ந்தவர் அனிஸ். இவரது மனைவி மலர்விழி(47). இவர் கொடைக்கானலில் செயல்பட்டு வரும் இங்கிலீஸ் கிளப்பில் சமையல் பிரிவில் பணிசெய்து வந்தார். இவர் தினமும் கிளப்பில் மீதம் வரும் உணவை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதை கிளப் பாதுகாவலர்கள் பார்த்து கடுமையாக எச்சரித்து அப்படி எடுத்துச் செல்லக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர். ஆனாலும், மலர்விழி அதைத் தொடரவே, கிளப் நிர்வாகம் அவரை வேறு பிரிவுக்கு மாற்றியது.

இதனால் கோபமடைந்த மலர்விழி சக பணியாளர்களைப் பழிவாங்கத் திட்டம் தீட்டினார். அதன்படி உணவில் கிளப்பில் இருந்த 'விண்டர்கிரீன்' என்னும் தைலத்தைக் கலந்து சக பணியாளர்களுக்குக் கொடுத்துள்ளார். இது துப்பாக்கியில் இருக்கும் உலோகங்களைச் சுத்தம் செய்யப்பயன்படுத்தும் எண்ணெய் ஆகும். கொடைக்கானலுக்கு வரும் ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்காக இந்த தைலம் கிளப்பில் இருந்தது. இதை சாப்பாட்டில் கலந்து கொடுத்ததைத் தொடர்ந்து அங்கு வேலை செய்த பணியாளர் ஒருவர் மயங்கினார். உடனே அனைத்து பணியாளர்களும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு மீண்டனர்.

இதுகுறித்து இங்கிலீஸ் கிளப் சார்பில் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் கிளப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மலர்விழி தைலத்தைக் கலப்பது தெரிந்தது. இன்னும் கொஞ்சம் கூடுதல் அளவில் சேர்த்து இருந்தால் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கும் அபாயம் இருந்ததாக மருத்துவ அறிக்கையும் கூறியது. இதனைத் தொடர்ந்து மலர்விழி இன்று கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in