அங்கன்வாடிகளில் அடிப்படைகள் வசதிகள் உள்ளதா? - மாவட்ட ஆட்சியர்களுக்குப் பறந்த உத்தரவு!

அங்கன்வாடிகள் (கோப்புப் படம்)
அங்கன்வாடிகள் (கோப்புப் படம்)தி இந்து

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்து நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார்.

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், “நமது சமுதாயத்தில் மிகவும் போற்றிப் பாதுகாக்கக் கூடிய குழந்தைகளின் நலனை உறுதி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நல சேவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மையங்கள் மிகுந்த செயல்திறனுடன் செயல்படுவதையும், மையங்களின் பராமரிப்பில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான வளர்ப்புச் சூழலை வழங்குவதையும் உறுதி செய்வது என்பது அரசினுடைய முக்கிய கடமையாகும்.

இந்த மையங்கள் செயல்படும் கட்டிடத்தின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கட்டிடத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஏதேனும் ஆபத்துக்கான சாத்தியக்கூறுகள் அல்லது கட்டமைப்பு சிக்கல்கள் இருந்தால் அவற்றை ஆவணப்படுத்தி அதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்கன்வாடிகள்
அங்கன்வாடிகள்

சத்து மாவு இருப்பு தேவைக்கேற்றவாறு உள்ளதா, குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் அக்மார்க் தரத்தில் உள்ளனவா, சரியாக வழங்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்திட வேண்டும். அங்கன்வாடி மையங்களில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்து மாவு மற்றும் அதுகுறித்த விளக்க கையேடு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் உணவு பற்றிய விவரங்களை சேகரித்து, குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

தாய்மார்களுடன் சிறிது நேரம் உரையாடி, மையத்தைப் பற்றிய அவர்களின் கருத்தை தெரிந்து கொள்வதோடு, உள்ளூர் பிரதிநிதிகள் அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை அறிந்து அவ்வப்போது மையங்களின் தேவைகளை அரசுக்கு தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கும் சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in