8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை: அதிர வைக்கும் காரணம்?

8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை: அதிர வைக்கும் காரணம்?

ஆந்திராவில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது அம்மாநில உயர் நீதிமன்றம்.

ஆந்திராவில் அரசு நலத்திட்டங்களை கிராமங்களுக்கு கொண்டு செல்லும் கிராம செயலக அமைப்பு திட்டத்திற்காக அரசுப் பள்ளிகளில் கிராம செயலக கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதற்கு எதிராக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரேமானந்த், பள்ளிகளில் கல்விக்கு சம்பந்தம் இல்லாத கட்டிடங்களை கட்டக்கூடாது என்று கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டார். ஆனால், உத்தரவை நிறைவேற்ற அதிகாரிகள் தொடர்ந்து காலம் தாழ்த்துவதாக கூறிய நீதிபதி, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

அப்போது, 90 சதவீத ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தேவையில்லை என்ற எண்ணத்தில் இருப்பதாக கடிந்து கொண்ட நீதிபதி, முந்தைய உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆந்திர பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலர் ஜி.கே.துவேதி, ஆணையர் கிரிஜாசங்கர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் ராஜசேகர் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அப்போது, அதிகாரிகள் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. இதையடுத்து, சிறை தண்டனையை திரும்பப்பெற்ற நீதிபதி, அதிகாரிகள் ஒரு வருடம் மாதம் ஒருநாள் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்க வேண்டும் என்றும் அங்கு மாணவர்களுக்கான மதிய, இரவு உணவுக்கான செலவை ஏற்க வேண்டும் என்றும் ஒருநாள் நீதிமன்ற செலவையும் ஏற்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in