ஆந்திரா தான் பாலியல் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலம்: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சில் அதிர்ச்சி தகவல்

ஆந்திரா தான்  பாலியல் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலம்: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவிலேயே ஆந்திரா மாநிலத்தில் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு கவுன்சில், பூர்விக பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், " ஆந்திராவில் 1.33 லட்சம் பூர்விக பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக கர்னூல், சித்தூர் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், கடப்பா மாவட்டத்தில் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

கடந்த 2021 ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 55 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 447 பாலியல் தொழிலாளர்கள் ஆந்திரப் பிரதேசத்திலும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 288 பாலியல் தொழிலாளர்கள் கர்நாடகாவிலும், தெலங்கானாவில் 1 லட்சத்து 818 பேரும், தமிழ்நாட்டில் 65 ஆயிரத்து 818 பேரும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த பாலியல் தொழிலாளர்களில் 1,450 பேர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு, மருந்துகளை உட்கொண்டு தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். பூர்விக பாலியல் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, ஆந்திராவிற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் 59 ஆயிரத்து 785 பேரும், டெல்லியில் 46 ஆயிரத்து 786 பேரும், மிசோரமில் 833 பேரும் உள்ளனர்.

ஆந்திராவில் 11 ஆயிரத்து 639 பேர் அண்டை மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து பாலியல் தொழிலாளிகளாக உள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 781, கர்னூலில் 12 ஆயிரத்து 709, சித்தூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 296 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என்று மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in