ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 65-ஆக உயர்வு?

ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 65-ஆக உயர்வு?

ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயதினை 65ஆக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டிருப்பதாக கடந்த சில தினங்களாக பரபரப்பு கிளம்பியது. 2 நாள் களேபரத்தை அடுத்து இந்த விவகாரத்துக்கு ஆந்திர அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 என்பதாக உள்ளது. இதனை 65ஆக உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்திருப்பதாக அண்மையில் தகவல்கள் பரவின. வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்கள் வாயிலாக பரவியதில், இவை ஆந்திராவுக்கு அப்பாலும் பெரியளவில் விவாதிக்கப்பட்டன.

பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஓய்வு பெறும் ஆயிரக்கணக்கிலான அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதிய பலன்களை ஒட்டுமொத்தமாக வழங்குவதில், அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களை களையவும் இந்த ஓய்வு பெறும் வயதினை உயர்த்தி அறிவிப்பது நடந்து வருகிறது.

தமிழ்நாட்டிலும் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 என்பதிலிருந்து உயர்த்தப்பட்டு 60 என்பதாக தற்போது நிலைகொண்டிருக்கிறது. இந்த வகையில் ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை 60 என்பதிலிருந்து உயர்த்தி ஓராண்டு முன்னதாக 62 என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை மேலும் உயர்த்தி 65ஆக மாநில அரசு அண்மையில் அறிவித்ததாக தகவல் பரவியது. இதற்கு சான்றாக அரசாணை ஒன்றும் இணைத்து வெளியிடப்பட்டது.

தற்போது அந்த தகவல் பொய்யானது என்றும், அதனுடன் இணைக்கப்பட்ட அரசாணை போலியாக சித்தரிக்கப்பட்டது எனவும் ஆந்திர அரசு தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், போலியான அரசாணையை உருவாக்கி பொதுவெளியில் பரப்பியது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் கீழ், அடையாளம் அறியப்படாத நபர்களின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in