மௌனசாமி மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால சிலைகள் மீட்பு

மௌனசாமி மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால சிலைகள் மீட்பு

கும்பகோணத்தில் உள்ள  மெளனசாமி மடத்தில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த  நடராஜர் உள்ளிட்ட பழங்கால உலோக சிலைகள் நான்கு, தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை  சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல்  செய்துள்ளனர்.

கும்பகோணத்தில் உள்ள மௌனசாமி மடத்தில் பழங்கால உலோக சிலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சாவூர் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த  20 பேர் கையெழுத்துட்டு மனு ஒன்றை அளித்திருந்தனர். அ்தனை ஏற்றுக்கொண்ட சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், இது குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்து,  மௌனசாமி மடத்தில் சோதனை மேற்கொள்வதற்கான அனுமதி பெற்றிருந்தனர். 

அந்த அனுமதியின்படி நேற்று காலை ஆய்வாளர் இந்திரா தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கும்பகோணம் மௌனசாமி மடத்துத் தெருவில்  உள்ள  மௌனசாமி மடத்திற்கு வந்து அனுமதியை காட்டி சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் மடத்தில் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நடராஜர்,  சிவகாமி, திருவாட்சியுடன் கூடிய விநாயகர்,  பாலதண்டாயுதபாணி ஆகிய நான்கு உலோகச் சிலைகளைக் கண்டறிந்தனர்.  அவற்றுடன் தஞ்சாவூர் ஓவியம் ஒன்றையும் கண்டறிந்தனர் 

இவற்றிற்கு உரிய ஆதாரங்களை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கேட்டபோது, மடத்தில் இருந்தவர்களால் அதற்கான ஆவணங்களை தர இயலவில்லை. அதனையடுத்து அந்த சிலைகளைப் பறிமுதல் செய்த சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அவற்றை கும்பகோணம் ஏசிஜேஎம்  நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.  இந்த சிலைகளின் விபரம் மற்றும் படங்களை தமிழக அறநிலையத் துறைக்கு அனுப்பி வைத்துள்ள சிலை கடத்த தடுப்பு பிரிவு போலீஸார், இவை எந்தக் கோயில்களில் இருந்தவை என்ற விவரங்களைக் கேட்டுள்ளனர். அது குறித்த விவரம் கிடைத்தவுடன் இந்த வழக்கு வேறு பிரிவுக்கு மாற்றப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சிலைகளை மீட்ட  போலீஸாரை,  சிலைக் கடத்தல் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டி, வெகுமதி அளித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in