`தற்கொலையை தடுங்கள்; மின்னல் வேகத்தில் செயல்படுங்கள்'- நீட் விவகாரத்தில் தமிழக அரசை வலியுறுத்தும் அன்புமணி

`தற்கொலையை தடுங்கள்; மின்னல் வேகத்தில் செயல்படுங்கள்'- நீட் விவகாரத்தில் தமிழக அரசை வலியுறுத்தும் அன்புமணி

"மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். நீட் தேர்வுக்கு அஞ்சி நடைபெறும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022-23-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் வரும் 17-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தொடங்குவதற்கு முன்பாகவே தற்கொலை நிகழ்வுகள் தொடங்கியியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் தனுஷ், கடந்த ஆண்டே 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதினார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், போதிய மதிப்பெண் பெறாததால் அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. நடப்பாண்டிலாவது மருத்துவப் படிப்பில் சேரும் நோக்கத்துடன் அவர், நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் தான் புதன்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுக் கொண்ட தனுஷ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்துள்ளார்.

மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அவர், அந்தக் கனவு நிறைவேறாதோ? என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். மாணவர் தனுஷின் தற்கொலை தனித்துப் பார்க்கப்பட வேண்டிய நிகழ்வு அல்ல. அதை தனித்த ஒன்றாக பார்க்கக் கூடாது. நீட் தேர்வு என்ற சமூக அநீதியின் பாதிப்புகள் இன்னும் விலகவில்லை; நீட் தேர்வு குறித்த அச்சம் தமிழக மாணவர்களின் மனங்களில் இருந்து இன்னும் அகலவில்லை என்பதையே மாணவர் தனுஷின் தற்கொலை காட்டுகிறது.

நீட் தேர்வால் கடந்த 2020-ம் ஆண்டில் 15 பேர் தற்கொலை செய்து கொண்டனர்; கடந்த ஆண்டில் 8 பேர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். நடப்பாண்டிலும் இது தொடர்கதையாகி விடக் கூடாது. நடப்பாண்டில் தனுஷின் தற்கொலை தான் முதலும், கடைசியுமானதாக இருக்க வேண்டும்; தற்கொலைகள் தொடர அனுமதிக்கக் கூடாது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதன் மூலம் தான் மாணவர்களின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் நோக்குடன் தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நீட் விலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

142 நாட்களுக்குப் பிறகு அச்சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், நடப்பாண்டு பிப்ரவரி 8ம் நாள் அதே சட்டம் தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அச்சட்டத்தை 86 நாட்கள் கழித்து மே 3-ம் நாள் தான் மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்தார். தமிழக அரசின் நீட் விலக்குச் சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 60 நாட்கள் ஆகியும், அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதில் அணுவளவும் முன்னேற்றம் இல்லை.

உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு சட்டம் அங்கிருந்து நகரவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதார அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற்றால் மட்டும் தான் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முடியும். நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசும் கடந்த 60 நாட்களாக மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

2022-23-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. அத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகி, அதனடிப்படையில் செப்டம்பர் மாத இறுதியில் தான் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கும். மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று விட்டால் கூட, நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கொள்ள முடியும். ஆனால், அதற்கு தமிழக அரசு மின்னல் வேகத்தில் விரைந்து செயல்பட வேண்டும்.

நீட் விலக்கு சட்டம் ஆளுநர் மாளிகையை கடப்பதற்கே மொத்தம் 234 நாட்கள் ஆயின. அதன்பின் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 60 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. அடுத்த 50 நாட்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை அரசு வெளியிட்டாக வேண்டும். 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றால், அதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும்.

அமைச்சர்கள் குழு அல்லது அனைத்துக் கட்சிக் குழுவை டெல்லிக்கு அனுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் மூலம் நீட் தேர்வுக்கு அஞ்சி நடைபெறும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in