
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்கின் விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், குண்டலபுலியூர் கிராமத்தில் ஜூபின்பேபி என்பவர் அன்புஜோதி ஆசிரமம் என்ற பெயரில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்க செல்வதற்கு முன்பு அவரின் மாமா 70 வயது ஜாபருல்லாவை அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். கடந்த டிசம்பர் 4 -ம் தேதி ஹலிதீன், அன்புஜோதி ஆசிரமத்திற்கு சென்ற போது ஜாபருல்லா அங்கு இல்லை என்பதும் அவரை பெங்களூருவில் உள்ள இல்லத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால் பெங்களூரு சென்று பார்த்ததில் அவர் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து ஜாபருல்லாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி ஹலிதீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதில், ஜாபருல்லா குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அன்பு ஜோதி இல்ல நிர்வாகிகள் தர மறுப்பதாகவும், காவல்துறையில் புகார் அளித்தால் புகாரை ஏற்க மறுப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தநிலையில், ஹலிதீன் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், ஆசிரமத்தில் ஆய்வு செய்துள்ளதாகவும், ஜூபின் பேபி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.