முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியரின் இளைய மகன் ஆனந்த அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம் இன்று ராஜஸ்தானில் நடந்தேறியது.
உலகின் உச்ச பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உட்பட பல்வேறு வணிக நிறுவனங்களை கட்டியாளும் முகேஷ் அம்பானிக்கு 3 வாரிசுகள். இவர்களில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் மகள் இஷா அம்பானி ஆகியோருக்கு திருமணம் முடித்துள்ளனர். எஞ்சிய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு, ராதிகா மெர்ச்சென்ட் என்ற மற்றுமொரு பெரும் வணிக குடும்பத்தின் வாரிசை நிச்சயம் செய்துள்ளனர்.
ஆனந்த் - ராதிகா இடையிலானது, காதல் மற்றும் ஏற்பாட்டுத் திருமணமாக கூடி வந்திருக்கிறது. அம்பானிகள் போல மற்றொரு வணிக முகமாக வளர்ந்து வரும் மெர்ச்சென்ட் குடும்பத்தின் வைரேன் - ஷாய்லா தம்பதியின் வாரிசு, ராதிகா மெர்ச்சென்ட். நியூயார்க் பல்கலையில் பட்டம் முடித்த ராதிகா, என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவின் பிரௌன் பல்கலையில் படிப்பை முடித்த ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ, ரிலையன்ஸ் ரீடெய்ல் உட்பட குடும்பத்தின் பல்வேறு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் பயிற்சி பெற்று வருகிறார்.
ராஜஸ்தானின் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் அம்பானி - மெர்ச்சென்ட் குடும்ப நிச்சயதார்த்தம் இன்று விமரிசையாக நடந்தது.