கணவரின் கனவை நிறைவேற்றத் துணிந்த மனைவி: துரத்திய துயரம்!

நெஞ்சை உலுக்கும் நேபாள விமான விபத்து
கணவரின் கனவை நிறைவேற்றத் துணிந்த மனைவி: துரத்திய துயரம்!

16 ஆண்டுகளுக்கு முன்னர் விமான விபத்தில் பலியான கணவரை பின்தொடர்ந்து, நேற்றைய நேபாள விமான விபத்தில் மனைவியும் பலியாகி இருக்கிறார். விமானிகளான இந்த தம்பதியரின் வாழ்வு, கனவு, மரணம் ஆகியவை சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நேபாள மக்களை மேலும் உலுக்கி வருகின்றன.

நேபாளத்தில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த விமான விபத்து ஒன்றில் அதன் துணை விமானியான கேப்டன் தீபக் போக்ரல் என்பவரும் பலியானார். கணவரின் மீது கொள்ளை பிரியம் வைத்திருந்த மனைவி அஞ்சு காதிவாடா உடைந்து போனார். அந்த துயரத்திலிருந்து அவர் மீண்டு வர ஆண்டுகள் ஆனது. கணவர் மீதான அபிமானத்தின் அடையாளமாக, அவரது கனவை பூர்த்தி செய்ய விரும்பினார் அஞ்சு. துணை விமானியாக இருந்த தீபக் போக்ரல், தான் ஆசைப்பட்டவாறே அடுத்த சில தினங்களில் விமானியாகப் போவதாக மனைவி அஞ்சுவிடம் பகிர்ந்திருந்தார். ஆனால் அதற்கு வாய்ப்பின்றி தீபக்கின் அகால மரணம் சம்பவித்தது.

விமான விபத்தில் இறந்ததற்காக கணவர் தீபக் பெயரிலான இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகை கையில் கிடைத்தபோது மனைவி அஞ்சு அந்த விசித்திர முடிவை எடுத்தார். கணவர் மீதான காதலில் அவரது கனவை நிறைவேற்றத் துணிந்தார். ஒரு விமானி ஆவதற்கான பயிற்சிக்கு இன்சூரன்ஸ் தொகையை அப்படியே செலவிட்டார். உறவினர்களும், நண்பர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

நிதர்சனத்தில் இது வியப்புக்கு உரியது. ரயில் விபத்தில் நெருங்கிய உறவினர் இறந்ததற்காக, அம்மாதிரியான ரயில் பயணத்தையே முற்றிலுமாக தவிர்ப்போர் அதிகம். சாமானிய பெண்ணாக இருந்திருப்பின், விமான பயணத்தையே அஞ்சு தவிர்த்திருக்கக் கூடும். ஆனால் கணவர் மீதான பிரியத்தில் அஞ்சு வித்தியாசம் காட்டினார்.

கணவர் நேசித்த விமானி பணியை அஞ்சுவும் விரும்ப ஆரம்பித்தார். கணவர் பயணித்த அதே ஆகாயத்தில் தானும் அவருடனான நினைவுகளுடன் பறக்க ஆசைப்பட்டார். அதற்கு முன்பு வரை விமானி ஆவது குறித்து யோசனையே இல்லாத அஞ்சு, கணவர் இறந்த சில வருடங்கள் கழித்து, விமானியாகும் முடிவோடு அதற்கான பயிற்சியில் சேர்ந்தார்.

அவர் விரும்பியபடியே விமானியாகவும் முயற்சியில் துணை விமானியாக பறக்க ஆரம்பித்தார். அந்த பணி அனுபவத்தின் நிறைவாக கூடிய விரைவில் விமானியாகவும் பணி உயர்வுக்காக காத்திருந்தார் அஞ்சு. ஆனால் விதி வலிது! நேற்றைய தினம் அவர் வழக்கமாக செலுத்தும் யெட்டி விமான நிறுவனத்தின் ’ஏடிஆர்-72’ பயணிகள் விமானத்தின் துணை விமானியாக ஏறினார். விமானியாக கேப்டன் கே.சி.கமல் என்பவர் செயல்பட்டார்.

விமான விபத்துகளுக்கு பேர்போன நேபாளத்தின் தொடர் விமான விபத்துகளுக்கு, இவர்கள் பயணித்த விமானமும் ஆளானது. நேற்று பொக்ராவில் தரையிறங்குவதற்கு முன்னர் கட்டுப்பாட்டை இழந்த இவர்களது விமானம் தரையில் மோதி தீப்பிழம்புகளுடன் சிதறியது. 68 பயணிகள், 4 விமான பணியாளர்கள் என மொத்தம் 72 பேர் பயணித்ததில் இதுவரை எவருமே உயிருடன் மீட்கப்படவில்லை. விமானத்தின் கேப்டன் கே.சி.கமல் உட்பட 68 நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏனைய நால்வரில் துணை விமானி அஞ்சுவும் அடங்குவார். விமான விபத்தில் எவருமே உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றபோதும் இரண்டாவது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன.

விமான விபத்தில் பலியான கணவரை அடியொற்றி, அவரது நிறைவேறாத ஆசையை பூர்த்தி செய்யும் கனவோடு விமானத்தில் பறந்த அஞ்சு, கணவர் போலவே அதே யெட்டி விமான நிறுவனத்தின் மற்றொரு விமான விபத்தில் பலியாகி இருக்கிறார். 16 வருட இடைவெளியில் கலையாத கனவுடன் கணவரைத் தேடிச் சென்றிருக்கும் அஞ்சுவின் துயரம், நேபாள மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in