சிறையில் கைதி திடீர் மரணம்: போலீஸ் அறிக்கையால் உறவினர்கள் கொந்தளிப்பு

சின்னத்துரை
சின்னத்துரை

புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை செய்தி நேற்று இரவு திடீரென மரணமடைந்த நிலையில் உடல் நலக் குறைபாடு காரணமாகவே அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு தனிப் படையினர் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20 ) பொன்னமராவதி அருகேயுள்ள காரையூர் பகுதியில் சில கடைகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 50 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் இது தொடர்பாக சின்னத்துரை (53) என்பவரை கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னத்துரை நீதிமன்ற உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சின்னத்துரைக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், சிறைக் காவலர்கள் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் விசாரணையில் சின்னத்துரைக்கு இதயப் பிரச்சினைக்காக கடந்த மாதம் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதய நோயாளியான அவருக்கு சிறையில் இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதய நோயாளியான அவரை உரிய மருத்துவ பரிசோதனை செய்யாமல் சிறையில் அடைத்திருந்ததாக போலீஸாருக்கு சின்னத்துரையின் உறவினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in