
காய்கறிக் கடை அமைக்க விருப்பமா? நாங்கள் அமைத்துத் தருகிறோம் என யூ டியூப்பில் வந்த விளம்பரத்தை நம்பி ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் இழந்த இருவருக்கு சைபர் கிரைம் போலீஸார் பணத்தை மீட்டுக் கொடுத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன்(63). இவர் யூடியூப்பில் வீடியோ பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அதில் ஒரு விளம்பரத்தில் காய்கறிக்கடை அமைக்க ஆசையா? என இருந்தது. அதைப் பார்த்ததும் மனோகரன் அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசி 1,10,000 ரூபாய் இணைய வழியிலேயே செலுத்தினார். ஆனால் சொன்னதுபோல் காய்கறிக்கடை அமைப்பது தொடர்பாக யாரும் தொடர்புகொள்ளவில்லை.
இதேபோல் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த ஜேசுகுமார் என்பவரும் ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்து 20 ஆயிரம் ரூபாய் இழந்தார். இதுகுறித்து இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் புகார் கொடுத்தனர்.
இப்புகாரை எஸ்.பி சரவணன். சைபர் கிரைம் போலீஸாருக்கு அனுப்பிவைத்தார். அவர்கள் இருவரது தொகையையும் மீட்டனர். அது இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் எஸ்.பி சரவணன், இணையத்தில் வரும் விளம்பரங்களை நம்பி அதில் முதலீடு செய்யவோ, ஏமாறவோ வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.