
கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பொது நூலகத்தைவிட மதுரை கலைஞர் நூலகம் பிரமாண்டது என பதிவிட்டுள்ளதால், இந்த நூலகத்தின் திறப்பு விழா மதுரையை தாண்டி, தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் இதுவரை ஆசியாவிலே பிரமாண்ட நூலகமாக பார்க்கப்பட்டது. தற்போது அதைக் காட்டிலும் பிரம்மாண்டமாக மதுரை புது நத்தம் சாலையில் சர்வதேச தரத்துடன் 114 கோடி மதிப்பீட்டில் கட்டிய கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.
இதில் 99 கோடி நூலக கட்டிடத்திற்கும், 10 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், 5 கோடி தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கவும் செலவிடப்பட்டுள்ளது. இந்த நூலகம் கீழ்தளம், தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறையின் சார்பில் ஓராண்டு 4 மாத காலத்திற்குள் இக்கட்டடப் பணிகள் மிக விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருக்கின்ற குழந்தைகள், மாணவர்கள் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இந்நூலகம் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் தமிழ் புத்தகங்கள், 2 லட்சத்து 75 ஆயிரம் ஆங்கில புத்தகங்கள், 6 ஆயிரம் இ-புத்தகங்கள் வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பழங்கால ஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தப்படுவதைப் போன்று, இந்த நூலகத்திலும் பழங்கால ஓலைச்சுவடிகளை நூலகத்திற்கு படிக்க வருகின்றவர்களுக்கு காட்சிப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வரும்நிலையில், வரும் ஜூலை 15-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், இந்த பிரமாண்ட நூலகத்தை மக்கள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்
இந்தநிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பொதுநூலகத்தை பார்வையிட வாய்ப்பு கிடைத்ததாகவும், 140 ஆண்களுக்கு மேலாக செயல்படும் இந்த பொதுநூலகத்தின் கீழ் 25க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு பருவத்திருக்குமான நூல்களை வகைப்படுத்தி சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் நிர்வகித்து வருகிறார்கள். நூலக நிர்வாகத்தினருடன் உரையாடிய போது மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பிரம்மாண்டம்தான் என் கண்முன் விரிந்தது.
சான் பிரான்சிஸ்கோ பொதுநூலகத்தை விடவும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப்பெரிய பரப்பளவில் பிரம்மாண்டமாக மிகச்சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணி தமிழனாக பெருமையடைந்தேன் ’’ என்று குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறை அமைச்சரின் இந்த ட்விட், மதுரையை தாண்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூலகம் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.