ஒரு லட்சம் முதலீடு; மாதம் 15 ஆயிரம் ரூபாய் வட்டி: ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த ஹிஜாவு நிறுவனம்

மோசடியில் ஈடுபட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அலெக்ஸாண்டர்
மோசடியில் ஈடுபட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அலெக்ஸாண்டர்

ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த ஹிஜாவு குழும நிறுவனம் மீது புகார்கள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம், இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ், எல்வின் போன்ற நிறுவனங்கள் பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மோசடியில் ஈடுபட்ட அலெக்ஸாண்டரின் தந்தை சௌந்தர்ராஜன்
மோசடியில் ஈடுபட்ட அலெக்ஸாண்டரின் தந்தை சௌந்தர்ராஜன்

இந்நிறுவனங்கள் அனைத்தும் மாதம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் வசூல் செய்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு் வந்த ஹிஜாவு குழுமம் என்ற நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி, கடந்த நான்கு வருடத்திற்கு மேலாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்தது தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு மாதம் கொடுக்க வேண்டிய வட்டி வராததால் முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்களை அணுகியுள்ளனர்.

இக்குழுமத்தின் தலைவரான சௌந்தர்ராஜன் மற்றும் நிர்வாக இயக்குநரான அவரது மகன் அலெக்சாண்டர் மற்றும் பல நிர்வாகிகள் சேர்ந்து பொதுமக்களிடம் தமிழகம் முழுவதும் பணத்தை வசூல் செய்துள்ளனர். முதற்கட்டமாக வசூல் செய்யும் போது முதலீட்டாளர்களிடம் 15% வட்டி தருவதாக ஆவணங்கள் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். இந்த நிறுவனம் www.mypayhm.com என்ற இணையதளத்தின் மூலம் உறுப்பினர் எண் கொடுத்து, ஆன்லைன் மூலமாக உறுப்பினர்களையும், அவர்கள் கணக்குகளையும் கையாண்டு வந்துள்ளனர். இந்த இணையதளத்தின் மூலம் எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது, மாதம் எவ்வளவு வட்டி வருகிறது உள்ளிட்ட தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

பாதிக்கப்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டவர்கள்

நிறுவனங்களில் பலர் முதலீடு செய்ய ஆரம்பித்தவுடன், பெரும்பாலானோர் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் எண்ணெய் கிணறுகள் வைத்திருப்பதாகவும், வசூல் செய்த பணத்தை அதில் முதலீடு செய்து லாபம் பெறுவதாகவும் கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். பலரிடமும் பணத்தை நேரடியாகவும் ரொக்கமாகவும் வசூல் செய்து வட்டியையும் ரொக்கமாகவே கையில் கொடுத்துள்ளனர். வெளிநாடுகளில் முதலீடு செய்த பணம் வருவதற்கு காலதாமதம் ஆவதால் வட்டி பணம் கொடுப்பதற்கு ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என முதலீட்டாளர்களிடம் தெரிவித்தவர்கள், அதன் பின்பும் பணத்தை தராமல் ஏமாற்றியதால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் நேற்று அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் முற்றுகையிட்டு தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளனர்.

இந்நிறுவனத்தில் ஆட்கள் சேர்ப்பவர்களுக்கு மாதாமாதம் கமிஷன் தொகையும் கொடுப்பதால் முதலீடு செய்த பலரும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பலரையும் இந்த நிறுவனத்தில் சேர்த்துள்ளனர். இதில் சிலர் முகவர்கள் போல் செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து கொடுத்ததும், அவ்வாறு பணம் வசூல் செய்து கொடுத்தவர்களில் சிலர் புகார் அளிக்க வந்த நூற்றுக்கணக்கானோருடன் சேர்ந்து புகார் அளிக்க வரும் போது சிக்கி கொண்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டவர்கள்

பணம் வசூல் செய்து கொடுத்த முகவர்களை முற்றுகையிட்டு பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் எண்ணெய் கிணற்றில் முதலீடு செய்வதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பல கோடி மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன் இருவரும் பிரபலங்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வைத்து ஏமாற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கரோனா காலத்தின் போது இந்நிறுவனம் முதலமைச்சர் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in