எல்லை மீறிய இன்ஸ்டாகிராம் பழக்கம்; குழந்தை பெற்ற பள்ளி மாணவி: மதுரையில் நடந்தது என்ன?

எல்லை மீறிய இன்ஸ்டாகிராம் பழக்கம்; குழந்தை பெற்ற பள்ளி மாணவி: மதுரையில் நடந்தது என்ன?

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் வாலிபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவிக்கு கழிப்பறையில் குழந்தை பிறந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் கவனிக்க இவருக்கு ஆன்ட்ராய்ட் செல்போனை அவரது பெற்றோர் வாங்கிக் கொடுத்தனர். அதை பயன்படுத்தி இவர் ஆன்லைனில் படிப்பதுடன், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களையும் பயன்படுத்தி வந்துள்ளார்.

அப்போது, மாணவிக்கும், அவரது, உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவே சிறிது நாளில், காதலாக மாறியது. மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை தனியாக அழைத்துச் சென்ற வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார். இதனை பெற்றோரிடம் கூறாமல் மறைத்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 22-ம் தேதி வீட்டின் கழிப்பறைக்குச் சென்ற மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

கழிப்பறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு மாணவியின் பெற்றோர் சென்று பார்த்த போது,அங்கு குழந்தையுடன் அவர்களது மகள் மயங்கிக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அவர்கள் இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து மாணவியிடம் அவரது பாட்டி விசாரித்தபோது, நத்தத்தைச் சேர்ந்த உறவினர் தான் இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தகவலின்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் புகாரின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த நத்தம் வாலிபரை நேற்று கைது செய்தனர். எல்லை மீறிய இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் பள்ளி மாணவி குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in