
செலவுக்கு பணம் கேட்டு மனைவியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், கீழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம் லிங்கன். இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் லைசென்ஸ் பெற்று வீட்டில் இரட்டைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். இவரது மனைவி தங்கம்(49). இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இதற்காக தங்கம் தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்தார்.
ஆபிரகாம் லிங்கன் தனக்கு பென்சன் வந்ததும் அந்தத் தொகையை தங்கத்திற்கு கொடுத்து விடுவது வழக்கம். தங்கம் அந்தப் பணத்தில் கடனையும் அடைத்து, வீட்டுச் செலவையும் செய்வார். இந்த நிலையில் இந்த மாத பென்சனில் 3000 ரூபாய் மது குடித்தே தீர்த்து இருக்கிறார் லிங்கன். இதை அவரது மனைவி தங்கம் கண்டித்தார். இதனிடையே குறைவாகக் கொடுத்த பென்சன் பணத்தில் இருந்து ஆபிரமாலிங்கன் மேலும் பணம் கேட்டுத் தகராறு செய்தார். இதை தங்கம் கண்டிக்கவே உடனே வீட்டில் இருந்த தன் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக் கொன்றுவிடுவதாக கொலைமிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தங்கம் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மனைவி புகார் கொடுத்திருப்பது தெரிந்ததும் முன்னாள் ராணுவ வீரர் ஆபிரகாம்லிங்கன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.