`சுமையாக இருக்க விரும்பவில்லை': கூலி வேலை செய்யும் பெற்றோரால் விபரீத முடிவெடுத்த மாணவி

`சுமையாக இருக்க விரும்பவில்லை': கூலி வேலை செய்யும் பெற்றோரால் விபரீத முடிவெடுத்த மாணவி

ஏழைப் பெற்றோரின்  பதினோராம் வகுப்பு படிக்கும் மகள்,  தனது குடும்பத்திற்கு சுமையாக இருக்க விரும்பவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட வெத்தலைக்காரன்காடு பகுதியில் வசிக்கும் கட்டிட வேலை செய்யும் மணி என்கின்ற மெய்யப்பன்- பைங்கிளி தம்பதியினருக்கு 11, மற்றும்  6-ம் வகுப்பு பயிலும்  இரண்டு மகள்களும்,  3-ம் வகுப்பு பயிலும் ஒரு மகனும் உள்ளனர்.

சித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும்  மூத்த மகள் அண்மைக் காலமாக   கண் நோயினால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதற்கு அதிகமாக  மருத்துவச்செலவு ஆகியுள்ளது. தொடர்ந்து செலவு ஆகியுள்ளது. இதனால்  கூலி தொழில் செய்து வரும் தனது  பெற்றோர் மிகவும் சிரமப்படுவதை பார்த்து  மாணவி மனம் வருந்தியுள்ளார்.

இதனால் தன் குடும்பத்திற்கு சுமையாக இருக்க விருப்பமில்லை எனக்கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு, நேற்று பட்ட பகலில் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூலி வேலைக்கு சென்ற அவரது தாய் பைங்கிளி மதிய உணவிற்கு வீடு திரும்பியபோது மகள் தூக்கில்  தொங்கியதைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியோடு அவரை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு துக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்  மாணவி உயிரிழந்ததை  உறுதி செய்தார்.

இதுகுறித்த தகவலறிந்த பூலாம்பட்டி போலீஸார் மாணவியின் வீட்டிற்கு  சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை  கைப்பற்றி தற்கொலை  குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோருக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை என்று மாணவி மனம் வருந்தி தற்கொலை செய்து கொண்டிருப்பது அந்த குடும்பத்திலும் மற்றும் உறவினர்கள் வட்டாரத்திலும்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in