
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து தமிழகத்திற்கு பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் குழு இன்று வந்துள்ளது. இக்குழு தமிழக அதிகாரிகளிடம் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் விடியோக்கள் மூலமாக வதந்தி பரவி வருகிறது. ஆனால், இந்த விடியோக்கள் போலியானவை என்றும் இதுபோன்று வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “பிஹார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக ஒரு தவறான போலியான பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இரண்டு வீடியோக்கள் அதில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீடியோக்களுமே போலியானவை. இந்த இரண்டு சம்பவங்களும் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் நிகழ்ந்தது. அதிலொன்று பிஹாரைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், மற்றொன்று கோயம்புத்தூரில் தமிழகத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் மோதிக்கொண்டது. ஆனால், இது அப்படியே மாற்றப்பட்டு தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி செய்தி பரப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் குழு சென்னை வந்துள்ளது. அவர்கள் தமிழக தொழிலாளர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
மேலும், பிஹாரைச் சேர்ந்த மக்கள், பணி செய்யும் இடத்திற்கே சென்று அவர்களது பணி சூழ்நிலை மற்றும் வசதிகள் குறித்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், “தமிழகத்தில் பணிபுரியும் பிஹார் மாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து நான் செய்தித்தாள்களில் அறிந்தேன். தமிழக அரசுடன் பேசி தமிழகத்தில் வசிக்கும் பிஹார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிஹார் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என ட்விட்டரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.