குறிவைத்துக் கொல்லும் பயங்கரவாதிகள்!

மீண்டும் அமைதியைத் தொலைத்துவிட்டு நிற்கும் காஷ்மீர்
குறிவைத்துக் கொல்லும் பயங்கரவாதிகள்!

‘நீதி வேண்டும்!’, ‘இந்துக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்!’ எனும் முழக்கங்கள் காஷ்மீரில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. காஷ்மீர் பண்டிட்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிவருகின்றனர். 1990-களில் நடந்த காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பாராட்டி விளம்பரம் செய்துகொண்டிருந்த பாஜகவினர் தற்போது அதே பண்டிட்களின் கோபத்துக்கு இலக்காகியிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது என காஷ்மீர் பண்டிட்கள் விமர்சித்துவருகிறார்கள். என்ன நடக்கிறது காஷ்மீரில்?

தொடரும் படுகொலைகள்

370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட பின்னர் காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாக மத்திய அரசு கூறிவந்த நிலையில், கடந்த அக்டோபரிலிருந்து காஷ்மீரில் உள்ள சிறுபான்மைச் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருகிறார்கள் பயங்கரவாதிகள். அரசு ஊழியர் ராகுல் பட், பள்ளி முதல்வர் சுபீந்தர் கவுர், ஆசிரியர் தீபக் சந்த், ஆசிரியை ரஜ்னி பாலா, காவலர் அஜய் தர், ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார் எனப் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாதுகாப்புப் படையினர், காவலர்கள் போன்றோரும் பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழக்கின்றனர் என்றாலும், வெளிமாநிலத்திலிருந்து வந்து பணிபுரிபவர்கள், காஷ்மீர் பண்டிட்கள் என காஷ்மீரின் சிறுபான்மைச் சமூகத்தினர்தான் பயங்கரவாதிகளின் பிரதான இலக்கு.

என்ன காரணம்?

610 காஷ்மீர் பண்டிட்களின் நிலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் பிப்ரவரி 9-ல் மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்தது. பண்டிட்களின் அசையா சொத்துகள் உள்ளிட்டவற்றை மீட்டெடுப்பதில் இருக்கும் பிரச்சினைகளைக் களைய கடந்த செப்டம்பரில் ஒரு சிறப்புப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. இப்படி அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

வெளிநபர்கள் காஷ்மீரில் நிலைபெறுவதை காஷ்மீர் மக்கள் இயல்பாகவே விரும்பாத நிலையில், அதைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் வெளிநபர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மத்திய அரசின் பணிகள் உள்ளூர் காஷ்மீரிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிலவும் அதிருப்தி சூழலையும் பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இந்தத் தாக்குதல்களை இரண்டு நோக்கங்களுக்காக பயங்கரவாதிகள் மேற்கொள்வதாக முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபேந்திர சிங் ஹூடா போன்றோர் சுட்டிக்காட்டுகிறார்கள். முதலாவது, மீள் குடியேற்றம் செய்யப்பட்ட காஷ்மீர் பண்டிட்களை அரசு காக்கும் எனும் நம்பிக்கையைத் தகர்ப்பது. இரண்டாவது, அரசு ஊழியர்களே படுகொலை செய்யப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அரசு இயந்திரத்தின் மீதான நம்பிக்கையைத் தகர்ப்பது. சொல்லப்போனால், பயங்கரவாதிகள் தங்கள் நோக்கத்தில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

பரவிக் கிடக்கும் பதற்றம்

படுகொலைகள் அதிகரித்ததால், காஷ்மீரில் பணிபுரியும் பண்டிட்கள் உள்ளிட்ட இந்துக்கள் ஜம்முவுக்குத் தங்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிவருகின்றனர். பீதியடைந்த காஷ்மீர் பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறிவருகிறார்கள். மூன்றில் ஒரு பங்கு பண்டிட்கள் வெளியேறிவிட்டதாகவும் மேலும் பலர் அதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, அரசு ஊழியர் ராகுல் பட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இதுவரை 2 ஆயிரம் காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் ஜம்முவுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாக ஜம்முவில் உள்ள பாஜகவினரே கூறியிருக்கிறார்கள்.

ஜம்முவுக்குச் சென்றுவிட்ட பலர் காஷ்மீரில் நிலைமை படுமோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். ராகுல் பட்டின் படுகொலைக்குப் பின்னர் காஷ்மீர் பண்டிட்கள் மேலும் கலக்கமடைந்தனர். கிடைத்த வாகனங்கள் மூலம் குல்காமிலிருந்து ஜம்முவுக்குச் செல்ல பல காஷ்மீர் பண்டிட்கள் முண்டியடித்தனர். அவர்களை வெளியே செல்லவிடாமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்தது. ஸ்ரீநகர் விமான நிலையத்திலும் அன்று வழக்கத்துக்கும் மாறாக ஏராளமான பயணிகள் குவிந்ததாகத் தகவல்கள் பரவின. எனினும் ஸ்ரீநகர் விமான நிலைய நிர்வாகம் அதை மறுத்தது.

நிலைமை சரியானதும் திரும்பிவரும் உத்தேசத்துடன் தான் பெரும்பாலானோர் கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். எனினும், சிலருக்கு மீண்டும் காஷ்மீருக்குத் திரும்ப விருப்பம் இல்லை என்றே தெரிகிறது. மறுவாழ்வு எனும் பெயரில் அரசு வேலை கிடைத்தாலும், குடியிருப்பு வசதியோ, பாதுகாப்பான சூழலோ தங்களுக்கு வழங்கப்படவில்லை என காஷ்மீர் பண்டிட்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

காஷ்மீர் பண்டிட் சங்கர்ஷ் சமிதி எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதற்கு முன்னர் காஷ்மீரிலிருந்து வெளியேறுவது குறித்து பேசியதே இல்லை. ஆனால், தற்போது காஷ்மீரில் உள்ள இந்து சிறுபான்மையினரை ஜம்முவுக்கு இடமாற்றம் செய்ய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தை அவர்கள் அணுகியிருக்கின்றனர். காஷ்மீர் பண்டிட்கள் வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக அவர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி பல்வேறு தடைகளை அரசு நிர்வாக செய்திருப்பது அவர்களைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. குடியிருப்புகளின் நுழைவாயில்கள் அடைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருக்கிறது.

அரசு தயங்குவது ஏன்?

இதற்கு முன்னரும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்திருக்கின்றன என்றும், அப்போது அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அவை கட்டுக்குள் வந்தன என்றும் கூறும் அரசுத் தரப்பு, இதுபோன்ற சம்பவங்களுக்குப் பயந்து அரசு ஊழியர்களைப் பணியிட மாற்றம் செய்வது அநாவசியம் எனப் பிடிவாதம் காட்டுகிறது.

1990-களில் காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றம் நடந்ததுபோல மீண்டும் ஒருமுறை நடந்துவிடக் கூடாது எனும் அக்கறை அரசிடம் தொனிக்கிறது. எனினும், அதுவரை அங்கு இருப்பவர்களுக்குப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதுதான் பலரது வாதம். அவர்களை இடமாற்றம் செய்யக் கூடாது எனும் முடிவில் மத்திய அரசு இருக்கிறது. காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துவரும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவே அங்கு எதிரொலிக்கிறது.

2010-ல் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் பண்டிட்களின் மீள்வருகை மற்றும் மறுவாழ்வுக்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் 6 ஆயிரம் பேருக்கு காஷ்மீரில் அரசுப் பணிகள் ஒதுக்கப்பட்டன. பலர் மாவட்டங்களுக்கு இடையிலான பணியிட மாறுதலின் அடிப்படையில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவருகிறார்கள். அந்த வகையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகிறார்கள். அவர்கள் அனைவருமே தாக்குதல் தொடர்பான அச்சத்தில் இருக்கிறார்கள்.

1990-களில் காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றத்தின்போது காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் நடைபெற்று வந்தது. மத்தியில் வி.பி.சிங்கின் அரசுக்கு பாஜக ஆதரவு அளித்துவந்தது. எனினும், பண்டிட்கள் வெளியேற்றம் தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகள், காஷ்மீர் கட்சிகள் மீதுதான் பாஜக குற்றம்சாட்டுகிறது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திலும் அப்படித்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, மத்தியில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து மீண்டும் வெளியேறுவது தங்களுக்கு அவப்பெயரை உருவாக்கும் எனும் அச்சமே அரசு இவ்விஷயத்தில் பிடிவாதம் காட்ட முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.

எகிறும் எதிர்க்கட்சிகள்

மோடியின் ஆட்சியில் காஷ்மீரில் அமைதி திரும்பிவருவதைப் பொறுத்துக்கொள்ளாமல் பயங்கரவாதிகள் மூலம் பாகிஸ்தான் இந்தத் தாக்குதல்களை நடத்திவருவதாக பாஜகவினர் கூறுகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. 1990-களில் ஏற்பட்டது போன்ற நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் போன்றோர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார்கள். இந்தப் படுகொலைகளுக்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம்தான் காரணம் என காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா போன்றோர் விமர்சித்திருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதைவிட, மத்திய ஆட்சியில் 8-வது ஆண்டை நிறைவுசெய்ததை பாஜக கொண்டாடிவருகிறது என ராகுல் காந்தி காட்டமாகக் கூறியிருக்கிறார்.

அடுத்து என்ன?

காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ உயரதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்ட உள் துறை அமைச்சர் அமித் ஷா அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசியதாகத் தெரிகிறது.

இதுவரை நடந்த தாக்குதல்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதுடன், இனிமேல் தாக்குதல்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம். இன்றைக்கு காஷ்மீரில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதக் குழுக்கள் குறிப்பிட்ட தலைமையின் கீழ் செயல்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர்களை எதிர்கொள்வது ஒரு சவாலாக உருவாகியிருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் மற்றும் பதுங்கு குழிகள் மூலம் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வருவது தெரியவந்திருக்கிறது. எல்லையில் கடந்த 18 மாதங்களில் 5 பதுங்கு குழிகள் கண்டறியப்பட்டிருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்திருக்கிறது.

போதாக்குறைக்கு அமர்நாத் யாத்திரை வேறு தொடங்குகிறது. இந்தச் சூழலில் சிறிய அளவிலான காந்த குண்டுகள் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இது அமர்நாத் யாத்திரையைச் சீர்குலைப்பதற்கான முயற்சி எனக் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் காஷ்மீரில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், காஷ்மீரில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பது, இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்முவிலும் விரும்பத்தகாக விளைவுகளை ஏற்படுத்தலாம் எனும் அச்சம் எழுந்திருக்கிறது.

காஷ்மீர் மக்கள் மத்தியில் நம்பிக்கை உருவாகும் வகையில் பாதுகாப்புப் படையினர் செயல்பட்டாக வேண்டும். குறிப்பாக, மத அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அணுகாமல், பயங்கரவாதிகளின் தொடர்புகள், அந்நிய சக்திகளின் பங்கு போன்றவை தொடர்பாகத் தீவிரமான விசாரணையை மேற்கொள்வது பலன் தரும் என்கிறார்கள். ராணுவம், துணை ராணுவப் படைகள், காஷ்மீர் காவல் துறை ஆகியவை இணைந்து இந்தச் சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணும் என நம்புவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in