‘பழங்குடியாகப் பிறந்ததுதான் எங்கள் குற்றமா?’

தடுமாறும் விசாரணை அமைப்புகள்... தாமதமாகும் நீதி!
‘பழங்குடியாகப் பிறந்ததுதான் எங்கள் குற்றமா?’

கைகளிலும் தோள்களிலும் பைகளைச் சுமந்தபடி அந்த வளாகத்திலிருந்து வெளிவரும் மனிதர்களைப் பார்க்கும்போது, பண்டிகைக் காலங்களில் சொந்த ஊருக்குப் புறப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடும். ஆனால், கூர்ந்து பார்த்தால் அவர்கள் முகமும் உடலும் சோர்ந்திருப்பது உங்களுக்குப் புலப்படும். அவர்கள் நமது ராணுவ வீரர்களைக் கொன்ற மாவோயிஸ்ட்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டு, 5 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பழங்குடியினர்.

அரசுத் தரப்பு எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்கவில்லை என்று சத்தீஸ்கரின் தந்தேவாடாவில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம், 121 பேரையும் விடுவித்து ஜூலை 15-ல் அளித்த தீர்ப்பு தேசம் முழுதும் பேசுபொருளாகியிருக்கிறது. கேட்க நாதியற்ற பழங்குடியினரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கும் அதிகார வர்க்கத்தையும் அசைத்துப் பார்த்திருக்கிறது.

தாக்குதலும் கைதும்

2017 ஏப்ரல் 24-ம் தேதி மாலை... சத்தீஸ்கரின் பஸ்தர் பிராந்தியத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள புர்காபால் கிராமம். அந்தப் பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் மத்திய ஆயுதக் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) 74-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்களும், சுக்மா மாவட்ட காவல் துறையினரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது 250-க்கும் மேற்பட்டோர் அடங்கிய மாவோயிஸ்ட் குழு அவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தத் தொடங்கியது. சில நிமிடங்களில் 25 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். 7 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் மாவோயிஸ்ட் தரப்பில் சில உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

சிஆர்பிஎஃப் வீரர்கள்...
சிஆர்பிஎஃப் வீரர்கள்...

மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ள பஸ்தர் பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் அது. இதற்கு முன்பு 2010-ல் தந்தேவாடாவின் தால்மேட்லா கிராமம் அருகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் திரண்டு நடத்திய தாக்குதலில் 76 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். சுக்மா சம்பவம் ரமன் சிங் தலைமையிலான அப்போதைய பாஜக அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது உள் துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் கூறினார். மாவோயிஸ்ட்கள் விடுத்த சவாலை எதிர்கொள்ள மத்திய அரசும் மாநில அரசும் தயார் என்று சூளுரைத்தார்.

அடுத்த சில நாட்களில் அந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என புர்காபால், சிந்தாகுஃபா, தால்மேட்லா உள்ளிட்ட ஆறு பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த 121 பேரை தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது. சிறார்கள், முதியவர்கள், பெண்களும் இதில் அடக்கம். மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடையவர்கள் என்றெல்லாம் பழைய வழக்கப்படி சொல்லாமல், அந்த கிராம மக்களே மாவோயிஸ்ட்கள்தான் எனும் ரீதியில்தான் குற்றச்சாட்டுகளை என்ஐஏ சுமத்தியிருந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 147-வது பிரிவு (கலவரத்தில் ஈடுபடுதல்), 148-வது சட்டப்பிரிவு (கலவரம், பயங்கர ஆயுதங்களை வைத்திருத்தல்), 302-வது சட்டப்பிரிவு (கொலைக் குற்றத்தில் ஈடுபடுதல்) என்பன உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

அதுமட்டுமல்ல... சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (உபா), சத்தீஸ்கர் மாநிலத்தின் மக்கள் பாதுகாப்புச் சிறப்புச் சட்டம் (சிஎஸ்பிஎஸ்ஏ) உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளும் அவர்கள் மீது பாய்ந்தன. தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் உறுப்பினர்கள் இவர்கள் என முத்திரை குத்தப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டிருக் கின்றனர். 7 சிறார்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டு விட்டனர். ஒருவர் சிறையிலேயே உயிரிழந்தார். மிச்சம் இருப்பவர்கள், விடுதலைக் காற்றை அனுபவித்தாலும் இழந்த வாழ்க்கையை மீட்க முடியுமா என ஏங்கி நிற்கிறார்கள்.

சுக்மா தாக்குதலுக்குப் பின்னரும் மாவோயிஸ்ட்கள் தங்கள் கைவரிசையைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். 2021 ஏப்ரல் 4-ல் சுக்மா பகுதியைச் சேர்ந்த ஜோனாகுடா கிராமத்தில் நடந்த தாக்குதலில் 22 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்கள் எங்கோ வனப் பகுதிகளில் பதுங்கியிருந்து அடுத்த தாக்குதல்களுக்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கக்கூடும். ஆனால், வன்முறைக்குத் துளியும் தொடர்பில்லாதவர்களை மாவோயிஸ்ட்களாகச் சித்தரிக்க என்ஐஏ முயன்றது இந்தத் தீர்ப்பின் மூலம் நிரூபணமாகி யிருக்கிறது. மாவோயிஸ்ட்களுக்குப் பதிலாக மக்களைச் சிறைப்பிடித்து குற்றவாளிகளாகச் சித்தரிக்க காவல் துறையினர் முயற்சிப்பதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குமுறுகிறார்கள்.

பந்தாடப்பட்ட பழங்குடியினர்

இதுபோன்ற புனையப்பட்ட வழக்குகளில் கைதுசெய்யப் படுபவர்களின் வாழ்க்கையே நிர்மூலமாகி விடுகிறது. அவர்களின் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து, சமூகத்தில் அவப் பெயரையும் சுமக்க நேர்கிறது. வழக்கை எதிர்கொள்ள, வழக்கறிஞர் வைத்து வாதாட போதிய பொருளாதார வலிமை இல்லாமல் இதுபோன்ற பழங்குடியினர் படும் பாடு சொல்லி மாளாதது.

டாக்டர் பேலா பாட்டியா
டாக்டர் பேலா பாட்டியா

தாங்கள் குற்றமற்றவர்கள் எனப் பழங்குடியினர் எவ்வளவு கெஞ்சியும் யாரும் செவிசாய்க்கவில்லை. அவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி ஐந்து ஆண்டுகள் போராடி விடுதலை பெற்றுத் தந்தது சமூகச் செயற்பாட்டாளர் டாக்டர் பேலா பாட்டியாவும் பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும்தான். “இந்தச் சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் செய்த ஒரே குற்றம் சிந்தாகுஃபா காவல் நிலையச் சரகத்தில் வசிக்கிறோம் என்பதுதான்” என கரிகுண்டம் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மட்கம் ராஜா வேதனையுடன் பதிவுசெய்திருக்கிறார். அந்த அளவுக்கு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

5 ஆண்டுகள் சிறையில் இருந்தும், இரண்டு முறைதான் விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அவர்கள் கொண்டு வரப்பட்டனர். அதுமட்டுமல்ல, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவே நான்கு ஆண்டுகள் ஆகின. 2021 ஆகஸ்ட் மாதம்தான் இவர்களது வழக்கு நீதிமன்ற விசாரணைக்கே வந்தது. மிகக் கடுமையான வழக்குகள் சுமத்தப்பட்டதால், பிணையில் வெளிவரவும் அவர்களால் இயலவில்லை.

நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கும், சாட்சிகள் அளித்த வாக்குமூலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என என்ஐஏ சிறப்பு நீதிபதி தீபக் குமார் தேஷ்லஹரே தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். சாட்சியம் அளித்த 25 பேரில் 22 பேருக்கு அப்படி ஒரு தாக்குதல் சம்பவம் நடந்ததே தெரியவில்லை. அத்தனை குற்றச்சாட்டுகளையும் காவல் நிலையத்தில் அமர்ந்தபடியே போலீஸார் புனைந்தனர் என பழங்குடியினருக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

சிறையில் வாடும் அப்பாவிகள்

சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் அவர்கள் இருந்ததாகவோ அல்லது மாவோயிஸ்ட்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருந்ததாகவோ அரசுத் தரப்பால் நிரூபிக்க முடியவில்லை. அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ முன்வைத்த வாதமும் வலுவற்றதாக இருந்தது. துப்பாக்கியால் சுட்டதுடன், ராக்கெட் லாஞ்சர் பயன்படுத்தியும் தாக்குதலில் மாவோயிஸ்ட்கள் ஈடுபட்டதாக உயிர் தப்பிய வீரர்கள் தெரிவித்தனர். ஆனால், கஞ்சிக்கே வழியில்லாத அந்தப் பழங்குடியினர் அந்தப் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் நிறுவ முயற்சித்தனர். சொல்லப்போனால், காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களிடம் சாட்சியம் பெறவும் என்ஐஏ தரப்பு தவறிவிட்டது.

விடுதலை செய்யப்பட்ட பழங்குடியினர்...
விடுதலை செய்யப்பட்ட பழங்குடியினர்...

இவர்கள் மட்டுமல்ல, ஏராளமான பழங்குடியினர், ஒரு குற்றமும் செய்யாத நிலையிலும் உபா உள்ளிட்ட கடுமையான சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடுகிறார்கள். சமீபத்தில், வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், “சிறையில் உள்ள கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினர், விசாரணைக் கைதிகள் என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் கைதுசெய்யப்பட்டிருக்க வேண்டியதே இல்லை” என்று கவலையுடன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

நாட்டின் விசாரணை அமைப்புகள், தனிமனிதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதைவிடவும் கைதுசெய்தல் எனும் கொடூரமான அதிகாரத்தை நாடும் மனநிலையையே வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவும் இதே கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த 18-வது அகில இந்திய சட்ட சேவைகள் ஆணையத்தின் தொடக்கவிழாவில் பேசிய நீதியரசர் என்.வி.ரமணா, “குற்றவியல் நீதி அமைப்பைப் பொறுத்தவரை, விசாரணை நடைமுறையே ஒரு தண்டனைதான். பின்விளைவுகளை யோசிக்காமல் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள், பிணை பெறுவதில் நிலவும் சிரமங்கள் எனத் தொடரும் இந்த நடைமுறையின் காரணமாக, விசாரணைக் கைதிகள் நீண்டகாலம் சிறையில் வாட வேண்டியிருக்கிறது. இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என்று தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

உடனடி நடவடிக்கை எனும் பெயரில் எளிய இலக்குகளாகச் சிக்கும் ஏழை மக்களைக் கைது செய்வது, போதிய ஆதாரம் இல்லை எனும் நிலையிலும் அவர்களைச் சிறையில் தள்ளி நீண்டகால விசாரணைக்குட்படுத்துவது என விசாரணை அமைப்புகள் நடந்துகொள்ளும் விதம் காலம் காலமாகவே கேள்விக்குட்படுத்தப்படுகிறது. வன்முறையைப் பிரயோகிக்கும் மாவோயிஸ்ட் போன்ற அமைப்பினரைச் சட்டத்தின் முன் நிறுத்த அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆதரவைப் பெறுவது அரசுக்கு மிகவும் முக்கியம். ஆனால், அவர்களையும் குற்றவாளிகளாகச் சித்தரித்து தண்டிக்க முயல்வது தார்மிக ரீதியிலான தோல்வியையே காட்டுகிறது.

இத்துடன் சுக்மா வழக்கு நின்றுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் மேல் முறையீடு செய்யப்படலாம். ஆனால், தங்கள் வாழ்க்கையை இருளில் தள்ளிய விசாரணை அதிகாரிகள் மீது பழங்குடியினர் வழக்கு தொடர முடியுமா, அதில் வெற்றிபெற முடியுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in