பிரக்ஞானந்தாவை ஆராதிக்கும் அமுல்: சிலேடை கார்ட்டூனை வெளியிட்டு சிறப்பிப்பு!
தமிழக இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துவருகிறார். சமீபத்தில், ‘எஃப்.டி.எக்ஸ்’ கிரிப்டோ கோப்பை செஸ் தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை அவர் வீழ்த்தியிருக்கிறார். கடந்த 6 மாதங்களில் மூன்றாவது முறையாக மேக்னஸ் கார்ல்சனை அவர் வீழ்த்தியதைத் தொடர்ந்து பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
இந்நிலையில், சிலேடை கார்ட்டூன்களுக்குப் புகழ்பெற்ற அமுல் இந்தியா நிறுவனம், பிரக்ஞானந்தாவை கெளரவிக்கும் வகையில் ஒரு சிறப்பு கார்ட்டூனை வெளியிட்டிருக்கிறது.
அமுல் இந்தியா நிறுவனம் வெளியிடும் கார்ட்டூன்களுக்குத் தனித்த ரசிகர் வட்டாரமே உண்டு. இந்திய சுதந்திர தினத்தையொட்டி அமுல் வெளியிட்ட கார்ட்டூன் 79,000-க்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளியது ஓர் உதாரணம். இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் நடக்கும் ஆக்கபூர்வமான நிகழ்வுகள், வெவ்வேறு துறைகளில் நிகழ்த்தப்படும் சாதனைகள் என உற்சாகமூட்டும் தருணங்களை உடனுக்குடன் கார்ட்டூன் வடிவில் தருவது அமுலின் தனித்தன்மை.

அந்த வகையில், தற்போது அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் கார்ட்டூன் பிரக்ஞானந்தாவின் புகழ்பாடுகிறது. அவரது பெயரையும், செஸ் விளையாட்டில் அவரது முன்னேற்றத்தையும் (progress) இணைத்து ஆங்கிலத்தில் pun என அழைக்கப்படும் சிலேடை பாணியில், 'He's mad great Pragguress' எனும் வாசகத்தை இந்த கார்ட்டூனில் சேர்த்திருக்கிறது அமுல். கூடவே, 'அமுல்: ரேபிட் பிரேக்ஃபாஸ்ட்’ எனும் வாசகமும் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த கார்ட்டூன் அமுல் இந்தியா நிறுவனத்தின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ‘செஸ் சாம்பியனை பதின்பருவ கிராண்ட்மாஸ்டர் மூன்றாவது முறையாக வீழ்த்தியிருக்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துவருகின்றன.