
பிரதமர் மோடி மீது மக்கள் அன்பையும் நம்பிக்கையையும் வைத்துள்ளனர் என்று மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பேசியதாவது: பாஜக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தி உள்ளோம். காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட 370-வது அரசியல் சாசன பிரிவை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீர் தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ளது. அதன்பிறகுதான் அங்கு கிராம அளவில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுவதன் மூலம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் பலன் பெறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2004 முதல் 2014 வரை ரூ. 70,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் விவசாயிகள் கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லை.
ஒரு குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டத்தின் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் ஊழல் நடக்காமல் அரசின் பணப் பலன்கள் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஏழைகளுக்கான நிதி முழுமையாக அவர்களை சென்றடைகிறது.
கரோனா கால சவால்களை மத்திய அரசு மிகத் திறமையாகக் கையாண்டது. கரோனா தொற்றால் உலகின் பல நாடுகள் பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்தபோதும் இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்தது. பெருந்தொற்று காலத்திலும் மக்கள் பசியால் வாடாமல் இருக்க நாடு முழுவதும் மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.
மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அரசைக் காப்பாற்ற எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது அம்பலமானது. ஒரே ஒரு வாக்கில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி அடைந்தாலும் வாஜ்பாய் மீண்டும் ஆட்சி அமைத்தார். அதிகாரத்தைக் காத்துக் கொள்ள காங்கிரஸ் போராடியது. நாங்கள் கொள்கைக்காக போராடுகிறோம். அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்திருப்பது அவர்களிடையே உள்ள அவநம்பிக்கையைக் காட்டுகிறது. 2014-ம் ஆண்டில் பொருளாதாரத்தில் 11 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஊழலுக்கும் வாரிசு அரசியலுக்கும் எதிராகப் போராடி வரும் பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 17 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார். அதனால்தான் மோடி மீது மக்கள் அன்பையும் நம்பிக்கையையும் வைத்துள்ளனர். 2024-ம் ஆண்டு தேர்தலிலும் மீண்டும் மோடியே பிரதமராவார்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.