இந்தி ஆட்சி மொழி அறிக்கையில் திருத்தம்: பிற மொழிகள் பேசும் மாநிலங்களின் எதிர்ப்பை சமாளிக்க அமித்ஷா முயற்சி

இந்தி ஆட்சி மொழி அறிக்கையில் திருத்தம்: பிற மொழிகள் பேசும் மாநிலங்களின் எதிர்ப்பை சமாளிக்க அமித்ஷா முயற்சி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வாரம், ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 11 ஆவது அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். 112 பரிந்துரைகளை கொண்ட இந்த அறிக்கையில், இந்தி மொழி திணிப்பு இருப்பதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. இதன் மீது இதர மொழிகள் பேசும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சர்ச்சைகள் கிளம்பி, போராட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன.

வழக்கத்திற்கு மாறாக, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஆட்சி மொழி அறிக்கை முழுவதுமாக வெளியிடப்படவில்லை எனத் தெரிகிறது. நாடாளுமன்ற இரு அவைகளின் எம்பிக்களுக்கும் இந்த அறிக்கை கிடைக்கவில்லை எனக் கருதப்படுகிறது. இதனால், அறிக்கையின் முழு விவரமும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, இதில் மேலும் பல மொழி திணிப்பு முயற்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு மட்டும் அமைச்சர் அமித்ஷா அனுப்பியுள்ளதாகக் கருதப்படுகிறது. இதன் சாரம்சமாக வெளியான பத்திரிகை குறிப்பின் மீதே பெரும் சர்ச்சைகள் கிளம்பி விட்டன. குறிப்பாக தமிழகத்தில் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாகும் சூழல் எழுந்துள்ளது. இதன் தாக்கம் 2024 மக்களவை தேர்தலில் பிராந்திய மற்றும் மாநில கட்சிகள் வெற்றி பெறும் வாய்ப்புகளும் உள்ளன. இதன் காரணமாக இந்த குழுவின் அறிக்கையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சகத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன.

இதன்படி, தனது அறிக்கையை வாபஸ் பெறும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதில் சில திருத்தங்களை செய்ய உள்ளார். பிறகு மீண்டும் அதை தாக்கல் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தனது தலைமையிலான மத்திய ஆட்சியை பாஜக மூன்றாவது முறையாகத் தொடர திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்ற சூழலை பலவகைகளில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அமைத்து வருகின்றனர். இதற்கு தடை ஏற்படும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிக்கை இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கம் எதிர்கட்சிகளுக்கு அரசியல் பலன் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுபோல், மத்திய அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளில் பின்வாங்குவது புதிதல்ல. இதற்கு வேளாண் சட்டங்களின் முக்கிய மூன்று மசோதாக்களில் செய்த திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தன. இதனால், பஞ்சாபில் துவங்கிய விவசாயிகள் போராட்டம் தேசிய அளவில் பரவியது. இவர்கள் அனைவரும் கூடி டெல்லியின் எல்லைகளில் ஒரு வருடத்திற்கும் அதிகமான நாட்களுக்கு தொடர் போராட்டம் நடத்தி இருந்தனர். இதனால், வேறு வழியின்றி பிரதமர் நரேந்திர மோடியே முன்வந்து அந்த வேளாண் மசோதாக்களை திடீர் என வாபஸ் பெறுவதாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in