'தன் தாய்மொழிக்கே துரோகம் செய்கிறார் அமித் ஷா!'

கர்நாடகா முன்னாள் முதல்வர் காட்டம்
'தன் தாய்மொழிக்கே துரோகம் செய்கிறார் அமித் ஷா!'

" குஜராத்தில் பிறந்த அமித் ஷா தனது சொந்த மாநிலத்திற்கும், தாய் மொழியான குஜராத்திக்கும் துரோகம் செய்யும் விதமாக நடந்து கொள்வது மோசமானது" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற அலுவல் மொழிக்கான கூட்டத்தில், " நாட்டின் இணைப்புக்கான மொழியாக ஆங்கிலம் செயல்படும் நிலையில், ஆங்கிலத்துடன் இந்தியையும் இணைப்பு மொழியாக மக்கள் ஏற்க வேண்டும்" என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. அவரது பேச்சக்கு தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறுகையில், "ஒரு கன்னடராக அமித் ஷா கூறிய கருத்தைக் கடுமையாக எதிர்க்கிறேன். இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. அவ்வாறு நிகழ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான பாஜகவின் பார்வை மாற வேண்டும். இதுபோன்ற பார்வை போலி தேசியவாதியான சாவர்க்கரின் பார்வையாகும். குஜராத்தில் பிறந்த அமித் ஷா தனது சொந்த மாநிலத்திற்கும், தாய் மொழியான குஜராத்திக்கும் துரோகம் செய்யும் விதமாக நடந்துகொள்ளவது மோசமானது" என்று அவர் கூறியுள்ளார்.

"இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. அமித் ஷாவும், பாஜகவும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணித்தால் அதைக் கடுமையாக எதிர்ப்போம். இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த மக்கள் வாழும் நாடாகும். இங்கு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற பாஜக கொள்கை எடுபடாது. பாசிசம் இதுபோலத்தான் செயல்படும். அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கு மாறாக பாஜக அரசு செயல்படுகிறது. இந்தித் திணிப்பு என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது" என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in