‘ஆண்டின் இறுதிக்குள் அயோத்தி ராமர் கோயில் தயார்!’

அமித் ஷா உறுதி
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

’நடப்பாண்டின் இறுதிக்குள் அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து, 2024 புத்தாண்டில் கோயில் தயாராகிவிடும்’ என மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

தெலங்கான முதல் திரிபுரா வரை 2023-ம் ஆண்டில் 10 மாநிலங்கள் தேர்தல்களை எதிர்கொண்டுள்ளன. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் எதிர்வரும் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அமித் ஷா முடுக்கி விட்டுள்ளார். அதன் பொருட்டு இன்றைய தினம்(ஜன.5) அங்கே பயணம் மேற்கொண்ட அமித் ஷா, ராமர் கோயில் குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை தீர்க்கும் வகையில் பேசினார்.

’2024, ஜன.1 அன்று அயோத்தி ராமர் கோயில் தயார்’ என்று உறுதிபட தெரிவித்த அமித் ஷா, ’கோயிலின் கட்டுமானப்பணிகள் தாமதமானதற்கு, நீதிமன்றம் வாயிலாக காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டதே காரணம்’ என குற்றம் சாட்டினார்.

அயோத்தி ராமர் கோயிலுக்கான முழக்கமே பாஜக-ன் எழுச்சிக்கு அடித்தளமிட்டது. 90களில் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையும் அதன் நிறைவாக 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் நடந்தது. ராமர் பிறந்த இடமாக நம்பப்படும் இடத்தில் 16-ம் நூற்றாண்டின் பாபர் காலத்தில் கட்டப்பட்ட மசூதி அது.

உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த ராமர் ஜென்ம பூமி தொடர்பான வழக்கு 2019-ல் தீர்ப்பானது. இதன்படி பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராமர் கோயில் கட்ட ஒப்படைக்கப்பட்டது. அதே அயோத்தியில் தனியாக மசூதி கட்டிக்கொள்ள மத்திய அரசு 5 ஏக்கர் ஒதுக்குமாறும் தீர்ப்பு வெளியானது.

அமித் ஷா
அமித் ஷா

இதனையடுத்து 2020, ஆகஸ்ட் 5 அன்று அயோத்தி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். சர்வதேச அளவிலான நன்கொடைகள் மற்றும் கலை உழைப்புடன் தயாராகும் ராமர் கோயிலுக்கான பணிகள் சரிபாதி முடிந்துவிட்டது என கடந்த நவம்பரில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். மேலும் நடப்பாண்டு டிசம்பருக்குள் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விடும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.

தரை தளத்தில் 160 தூண்கள், முதல் தளத்தில் 132 தூண்கள், இரண்டாம் தளத்தில் 74 தூண்கள் என பிரமாண்டமாக உருவெடுத்து வருகிறது அயோத்தி ராமர் கோயில். கோயில் வளாகத்தினுள் 5 மண்டபங்கள், அருங்காட்சியகம், ஆய்வு மையம், கலைக்கூடம், நிர்வாக கூடங்கள், பக்தர்களுக்கான அறைகள் மற்றும் ஒரு கால்நடைத் தொழுவம் உள்ளிட்ட வசதிகள் இந்த கோயிலில் அடங்கியுள்ளன.

பாஜகவை பொறுத்தவரை, ராமர் கோயில் என்பது மிகப்பெரும் துருப்புச்சீட்டு. அந்த வகையில் 2024 மக்களவை தேர்தல் நெருக்கத்தில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை செயல்படுத்த சித்தமாக உள்ளது. அப்போது பெருக்கெடுக்கும் மக்களின் வரவேற்பை மக்களவை தேர்தலில் அறுவடை செய்யவும் காத்திருக்கிறது. அதன்படி ’ராமர் கோயில் 2024, ஜன.1 அன்று தயார்’ என்று அமித் ஷாவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in