‘பாகிஸ்தான் திவால்’: இந்தியாவுக்கு எதிரான சீனாவின் அடுத்த வாலாட்டல்!


‘பாகிஸ்தான் திவால்’: இந்தியாவுக்கு எதிரான சீனாவின் அடுத்த வாலாட்டல்!

பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முதல் ஐஎஸ்ஐ உளவு நிறுவனம் வரை எத்தனையோ வெடிகுண்டுகளை எல்லை கடந்து இந்தியாவில் வெடிக்கச் செய்திருக்கிறார்கள். தற்போது சொந்த செலவிலான சூனியமாக பாகிஸ்தான் தேசமே வெடிகுண்டாக வெடிக்க காத்திருக்கிறது. ஓரிரு வாரங்களில் வெடிக்கவிருக்கும் அந்த வெடிகுண்டின் பெயர் ’பாகிஸ்தான் திவால்’!

இலங்கையை சீரழித்த பொருளாதார நெருக்கடியே பாகிஸ்தானையும் படுகுழியில் தள்ளியிருப்பதையும், இதன் பின்னணியில் சீனா இருந்திருப்பதும், உள்ளபடி இந்தியாவின் கவலைக்குரிய அம்சங்களாகும். தனது எல்லையில் இரண்டாவது தேசமாக பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் வீழ்வதையும், பிரதான எதிரி தேசத்தின் ஆளுகை அங்கே அதிகரிப்பதையும் இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது.

சில தேசபக்தர்கள் மகிழ்ச்சி அடைவதுபோல, பாகிஸ்தானின் வீழ்ச்சியில் இந்தியாவுக்கான ஆதாயம் ஏதுமில்லை. சுற்றிவளைத்து வரும் சீனாவின், அடுத்த குறி இந்தியா என்பதால் நாம் சுதாரித்தாக வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.

பக்..பக்.. பாகிஸ்தான்!

ஜூலை மாதம் முதல் பாகிஸ்தானில் மின் விசிறி உற்பத்திகளுக்கு தடை விதிக்கப்பட இருக்கிறது. மின் விசிறி இன்றி எதிர்வரும் கோடையை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையில் இப்போதே பாகிஸ்தானில் வியர்த்து கிடக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க தடுமாறுகிறது பாக் அரசு. பணிக்கொடைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் தாமதமாகிறது. ரயில் ஓட்டுநர்கள் கடந்த ஒரு மாதமாக ஊதியம் வரவில்லை என நாடு முழுக்க ரயில்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

அரசு மானியத்தில் வழங்கும் உணவே பத்து மடங்கு விலை உயர்ந்து, மானியம் என்பதையே கேலிக்கு உரியதாக மாற்றி இருக்கிறது. கிடைக்கும் உணவுப் பொருளையும் பெறுவதில் சாமானிய மக்களிடையே அடிதடி நடக்கிறது. அந்த காட்சிகளை சித்தரிக்கும் குறு வீடியோக்கள், சதா பாகிஸ்தானை திட்டும் இந்தியர்களைக் கூட உச்சுக் கொட்ட வைத்திருக்கின்றன. அங்கே மத்திய வர்க்கத்தினர் கைக்காசை எண்ணி செலவிட, எரிபொருள் விலை உயர்வால் சொந்த வாகனங்களை ஓரங்கட்டி வசதி படைத்தவர்களும் பொதுப்போக்குவரத்துக்கு மாறி வருகிறார்கள்.

அசைவத்தின் விலை எகிறியதில் பிரியாணி இல்லாத நாட்களுக்கு பாகிஸ்தானியர்கள் பழகி வருகின்றனர். நாட்டு பொருளாதாரம் மேலும் வீழ்வதை தடுக்க, அன்பு மக்கள் அனைவரும் அன்றாடம் அருந்தும் டீ எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளுமாறு பாக் அமைச்சர் ஆசன் இக்பால் அறைகூவல் விடுத்திருக்கிறார். அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

இயற்கை - செயற்கை பேரிடர்கள்

பாகிஸ்தான் பொருளாதாரம் மென்மேலும் சரிவதற்கு கடந்தாண்டின் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களே காரணம் என சொல்லப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் முதல் சௌதி வரை இதை சொல்லியே நிதியுதவிக்கு பாகிஸ்தான் இறைஞ்சி நிற்கிறது. இயற்கை பேரிடர்கள் பாகிஸ்தானை புரட்டிப்போட்டது உண்மைதான். ஆனால் ஆட்சியாளர்கள் உருவாக்கிய செயற்கை இடர்களே பாகிஸ்தானை குழி தோண்டி புதைத்துள்ளன.

ஊழல் பெருச்சாளிகளான ஆட்சியாளர்கள், நிர்வாகத்தில் தலையை நுழைக்கும் ராணுவ மற்றும் உளவுத்துறைகளின் துரைகள், ஆட்சியாளர்களுக்கு நிகராக அவர்கள் குவிக்கும் அயல்நாட்டு சொத்துக்கள், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் பழிவாங்கலுக்காக விரலை மீறி வீக்கம் காணும் ராணுவ தளவாட செலவினங்கள்... என இந்த செயற்கை பேரிடர்களின் பட்டியல் நீளமானது.

பாகிஸ்தானை ஆளும் அமெரிக்கா, இங்கிலாந்து?

பாக் ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் கைப்பாவையாக ஆடுவதே பாகிஸ்தான் சீரழிவதற்கான பிரதான காரணமாக நீடித்தது. அமெரிக்காவை பொறுத்தவரை பயங்கரவாதத்துக்கு எதிரான அதன் போரில் பாகிஸ்தானை ஆக முடிந்தளவுக்கு பயன்படுத்திக்கொண்டது. ஒசாமா பின்லேடனைத் தேடி ஆப்கனில் ஊடுருவிய அமெரிக்க ராணுவம், பாகிஸ்தானில் வைத்து ஒசாமாவை கொன்றழித்த பிறகும் ஆப்கனில் 20 ஆண்டுகள் அமெரிக்கா நீடிப்பதற்கு பாகிஸ்தானின் ஆதரவுக்கரம் முக்கியமானது.

கைமாறாக, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை மற்றும் நாட்டு நலம் என்ற பெயரில் ஏராளமான நிதியாதாரங்களை அமெரிக்காவிடம் பெற்ற பாக் ஆட்சியாளர்கள், அதில் தனிப்பட்ட வகையிலும் சுருட்டினர். வளைகுடா தேசங்களில் தொடங்கி, அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து என, பாக் முன்னாள் ஆட்சியாளர்கள் குடும்பத்தினர் பெயரில் சொத்துக்களை குவித்திருப்பதே இதற்கு சாட்சி.

நவாஸ் - ஷெபாஸ் சகோதரர்கள்
நவாஸ் - ஷெபாஸ் சகோதரர்கள்

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் மீது இங்கிலாந்து செலுத்தும் ஆதிக்கம் விசித்திரமானது. இதனை ’இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் தொடரும் பாகிஸ்தான்’ என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர். தம்பி ஷெபாஸ் ஷெரீபை பாக் பிரதமர் நாற்காலியில் பொம்மையாக அமரவைத்துவிட்டு, இங்கிலாந்திலிருந்து மறைமுகமாக பாகிஸ்தானை ஆட்சி செய்து வருகிறார் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப். முந்தைய ஊழல் ஆட்சியாளர்களின் வரிசையில், நவாஸ் ஷெரீப்பும் ஏகமாய் கொள்ளையடித்ததில், வெகுண்ட நீதிமன்றம் அவரை சிறையில் தள்ளும் அளவுக்கு வீழ்ந்தார். மருத்துவ சிகிச்சையின் போர்வையில் வளைகுடா தேசம் பக்கம் போனவர், கரோனாவை காரணமாக்கி இங்கிலாந்தில் தங்கி விட்டார்.

பாக். திரும்பினால் கைது நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிடும் என்பதால் அங்கிருந்தபடியே ரிமோட் கன்ட்ரோலில் ஆட்சியை தொடர்கிறார். மக்களுக்கான நலத்திட்டங்கள், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக உபாயங்களை என எதையும் யோசிக்காது, எந்த நாட்டில் எத்தனை பில்லியன் கடன் கேட்கலாம் என்பதிலேயே நவாஸ் - ஷேபாஸ் சகோதரர்கள் தீவிரமாக இருக்கின்றனர். பாகிஸ்தானின் பழகிய புரவலரான சௌதி தேசமே, கடன் கொடுக்கத் தயங்கும் அளவுக்கு பாக் நிலைமை மோசமடைந்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து வரிசையில் பாக் மீதான ஆளுகையில் தீவிரம் காட்டும் தேசமாக புதிரான கோணத்தில் வளர்ந்து வருகிறது சீனா! இந்தியாவின் கவலைக்கும் இதுவே உரித்தாகிறது.

இலங்கை முதல் பாக் வரை நீளும் டிராகன் வால்

தெற்கில் இலங்கையை சிதைத்த சீன டிராகன், வடக்கின் பாகிஸ்தானையும் கபளீகரம் செய்வதை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது. உள்நாட்டுப் போரை எதிர்கொள்ள, இந்தியாவைவிட சீனாவை அதிகம் எதிர்பார்க்க ஆரம்பித்ததில் இலங்கைக்கு சீனா எனும் சனி பிடித்தது. கடன் வலையில் வீழ்த்தியதும், அதற்கு பிணையாக துறைமுக நகரங்களை வளைத்ததுமாக சீனாவின் சுயரூபம் அறிந்த பிறகும், அந்த படுகுழியிலிருந்து இலங்கையால் விடுபட முடியவில்லை. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதில் கொந்தளித்த மக்கள் போராட்டத்தை கையில் எடுத்ததும், ஆட்சியாளர்கள் நாட்டை விட்டே ஓடியதையும் பார்த்தோம்.

இலங்கையின் மக்கள் போராட்டம்
இலங்கையின் மக்கள் போராட்டம்

இலங்கைக்கு இணையான காட்சிகள் விரைவில் பாகிஸ்தானிலும் அரங்கேற இருக்கின்றன. இந்தியாவுக்கு எதிராக இணைந்து நிற்போம் என்ற பசப்பலில் பாகிஸ்தானை வளைத்தது சீனா. ”பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து திடீரென இந்தியா மீது படையெடுக்கப் போகின்றன” என்ற ராகுல் காந்தியின் கவலை அத்தனை எளிதில் ஒதுக்கக்கூடியதல்ல. அவ்வாறான போரில் சீனா எடுக்கும் முடிவே பிரதானமாக இருக்கும் என்பதற்கு பாகிஸ்தானின் சீரழிவு வழியமைத்து வருகிறது. கொந்தளிக்கும் நாட்டு மக்களை சமாளிப்பதற்கு எந்த அஸ்திரத்தை பிரயேகிக்கலாம் என ஆட்சியாளர்களும் ராணுவத் தலைமையும் கலந்தாலோசித்து வருகின்றனர்.

இந்திய எதிர்ப்பின் பெயரிலான போர் நடவடிக்கையும் அதையொட்டி பாகிஸ்தானில் அமலாகும் நெருக்கடி சூழலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு அந்நாட்டை ஆட்சியாளர்கள் வசமிருக்க வாய்ப்பளிக்கும். சீனா உடனான பேரங்கள் படிவதை பொறுத்தே பாகிஸ்தானின் சம்மதம் இதில் வெளிப்படும். அல்லது தனது கடன் மற்றும் பொருளாதார கட்டமைப்பு திட்டங்களை முன்வைத்தும் உரிய நெருக்கடி சூழலை சீனாவே உருவாக்கும்.

இந்தியா மட்டுமன்றி ஆப்கன் எல்லையில் எழும் ராணுவ சிக்கல்களை எதிர்கொள்ளவும் பாகிஸ்தானுக்கு சீனாவின் உதவி தேவைப்படுகிறது. ’டுரண்ட் கோடு’ எனப்படும் ஆங்கிலேயர் காலத்திய பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைக் கோட்டினை அதற்கான ஒப்பந்தம் காலாவதியானதாக, பாகிஸ்தான் தாலிபன்கள் எச்சில் தொட்டு என்றோ அழித்து விட்டனர். முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தினை பிரகடனம் செய்திருந்த, பாகிஸ்தான் தாலிபன் எனப்படும் ’தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்’ பயங்கரவாத அமைப்பு, நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்திருப்பதை காரணமாக்கி போட்டி அரசினை வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.

டுரண்ட் எல்லைக்கோடு
டுரண்ட் எல்லைக்கோடு

இன்னொரு வகையில், மாதம் தோறும் பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பாகிஸ்தான் செலவாணி ஆப்கன் எல்லையில் கடத்தப்படுவதும் பாக் தரப்பில் பெரும் தலைவலியாகிறது. அமெரிக்கா கைவிட்ட நிலையில், இந்திய எல்லை மட்டுமன்றி ஆப்கன் எல்லை பிரச்சினைகளை சமாளிக்கவும் சீனாவின் உதவி பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது. பாகிஸ்தான், ஆப்கன் என எதைப்பற்றியும் கவலைப்படாத சீனா, இந்திய எல்லைக்குள்ளும் இதர உபாயங்களில் ஏற்கனவே நுழைந்து சகல திசைகளிலும் வியாப்பித்துள்ளது.

இந்தியாவில் டிராகன்

இந்தியாவில் அண்மைக் காலமாக அதிக சர்ச்சைகளுக்கு ஆளாகும் ஆன்லைன் கடன் முதல் சூதாட்டம் வரையிலான செயலிகள் பலதும் பெரும் புகார்களுக்கு ஆளாகின. முன்னதாக எழுந்தடங்கிய கிரிப்டோகரன்சி முதலீட்டு தூண்டில்களையும் இதில் சேர்க்கலாம். இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களின் பின்னணியில் சீனா இருப்பதாக அமலாக்கத்துறை அண்மையில் கண்டறிந்தது. இந்த நிறுவனங்கள் வாயிலாக வாரம் தோறும் பல்லாயிரம் கோடி இந்திய செலவாணி சீனாவுக்கு முறையற்ற வகையில் செல்வதாகவும் விசாரணை அமைப்புகள் குறை காண்கின்றன.

செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களின் விற்பனை வாயிலாக சீன நிறுவனங்கள் முறையற்ற வகையில் இந்திய சந்தையை ஆக்கிரமிப்பதாகவும், சுதேசி நிறுவனங்களை நசுக்கி நொடிக்கச் செய்வதாகவும் புகார்கள் நிலுவையிருக்கின்றன. அவற்றின் பின்னணியில் புதைந்திருந்த முறைகேடுகளையும், இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் முயற்சிகளையும் கண்டறிந்தபோதுதான், ஆன்லைன் செயலிகள் அபாயம் அமலாக்கத்துறை கவனத்துக்கு வந்தது. ஏற்கனவே பங்குச் சந்தையை பிடித்தாட்டும் சீன பின்புலத்திலான நிறுவனங்கள் குறித்த புகார்களுக்கு மத்தியில், புதிய பூதங்கள் எழுவதை இந்தியா கவலையோடு கவனித்து வருகிறது. இணைய வழியிலும், எல்லையிலும் மூளும் தாக்குதல்களுக்கு நிகராக, எல்லைக்குள் தொடுக்கப்படும் பொருளாதார போர்கள் விநோதம் காட்டுகின்றன.

பொருளாதார சீரழிவுக்கான சுனாமியில், இலங்கை, பாகிஸ்தான் வரிசையில் இந்தியாவை ஆட்படுத்தும் சீனாவின் சூழ்ச்சிகளையே இவை காட்டுகின்றன. இலங்கை தள்ளாடிபோதே, அடுத்த திவால் இந்தியா என்பதாக புரளிகள் எழுந்தன. ராணுவம் முதல் பொருளாதாரம் வரை நாட்டின் ஸ்திரத்துக்கு அஸ்திவாரமான விஷயங்களில், மத்தியில் ஆள்பவர்கள் வெளிப்படைத் தன்மையின்றி செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இவற்றின் அடிப்படையிலும் பாகிஸ்தானின் பொருளாதார சீரழிவினை கவலையோடு உற்று கவனிக்க வேண்டியிருக்கிறது. கிழக்கு - மேற்கு என்றில்லாது, உலக அளவில் பல்வேறு நாடுகளையும் பொருளாதார மந்தம், பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவை அலைக்கழித்து வருகின்றன. அடிப்படையில் வலுவான பொருளாதார கட்டமைப்பு கொண்ட இந்தியா, எல்லையிலும், உள்ளாகவும் ஊடுருவும் ஆபத்துகளை கவனத்தோடு ஆராய வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகி இருக்கிறது.

சாமானியர்களும் தங்கள் தரப்பிலான கடமையாக, நாளைக்கும் சேர்த்து சேமிக்கவும், உழைக்கவும் தயாராவோம். இடையே டீ அருந்தவும், மின்விசிறி இயங்கவும் நமக்கு எந்தத் தடையுமில்லை... இப்போதைக்கு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in