10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மாணவர் போராட்டம்

மாணவர்களை தூண்டியதாக யூடியூபர் சிறையில் அடைப்பு
விகாஸ் பதக்
விகாஸ் பதக்

மகாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்யகோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழுந்தது. வன்முறையில் இறங்கிய அந்த மாணவர்கள் அனைவருமே சிறார்கள் என்பதால், அவர்களை கட்டுப்படுத்த வழியின்றி போலீஸார் திகைத்துப் போனார்கள். இந்நிலையில் பள்ளி மாணவர் போராட்டத்தை தூண்டிவிட்டதாக, பிரபல யூடியூபர் ஒருவரை நேற்று(பிப்.1) போலீஸார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்யக்கோரி, கடந்த சில தினங்களாக பள்ளி மாணவர்கள் போராடி வருகின்றனர். விகாஸ் பதக் என்ற யூடியூபர், வீதிகளில் இறங்கிப் போராடுமாறு மாணவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவ்வாறு பொதுவெளியில் இறங்கிய மாணவர்களில் பலர் வன்முறைகளிலும் ஈடுபட்டதால், பதற்றம் சேர்ந்தது.

பெருந்தொற்றுப் பரவல் தீவிரமாக இருந்ததை அடுத்து, கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்த மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரமும் சேர்ந்தது. ஆனால், இந்தக் கல்வியாண்டில் அக்டோபர் மாதம் முதலே அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டு கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் தேர்வுகள் நெருங்கும் சூழலில், அவற்றை ரத்து செய்யுமாறும், அதற்கு வாய்ப்பு இல்லையெனில் ஆன்லைன் தேர்வுகளை நடத்துமாறும் பள்ளி மாணவர் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

மகாராஷ்டிர பள்ளி மாணவர் போராட்டம்
மகாராஷ்டிர பள்ளி மாணவர் போராட்டம்

மாணவர்கள் சார்பில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும், பிரபல யூடியூபருமான விகாஸ் பதக் என்பவர் குரல் கொடுக்க ஆரம்பித்ததும், போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் தேடுவோர் வழக்கமாக மேற்கொள்ளும் பரபரப்பு நாடகங்களில் விகாஸ் பதக்கும் இறங்கியதாக போலீஸார் குற்றம்சாட்டினர். விகாஸ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், ‘‘கரோனா நெருக்கடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளால் பள்ளி மாணவர்கள் கடும் மன அழுத்தத்தில் தவித்து வருகின்றனர். அதனால், அவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுகளை அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டும்’’ என்று அறைகூவல் விடுத்தார்.

மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வீட்டின் முன்பாகத் திரண்டு போராடும்படி, மாணவர்களை விகாஸ் தூண்டிவிட்டார். மேலும் இதேபோன்ற போராட்டங்கள் நாக்பூர், மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், சிற்றூர்களிலும் திரள ஆரம்பித்தன. அப்படி வீதிகளில் இறங்கிய மாணவர்கள் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியபோதும், போலீஸார் களத்தில் இறங்கி அவர்களை தடுக்கத் தயங்கினர். பெருந்திரளான சிறார்களை கட்டுப்படுத்துவது போலீஸாருக்கு புதிய சவாலாகிப்போனது. சில இடங்களில் மட்டும் லத்திகளால் விளாசி கூட்டத்தைக் கலைத்தனர். அதுவும் உதவாது போகவே, தலைமறைவாக இருந்த விகாஸ் பதக்கை கைது செய்து முடக்கினார்கள். சேதமடைந்த பொதுச்சொத்துகளை ஈடு செய்வதாக விகாஸ் தரப்பில் முன்வந்தபோதும், நீதிமன்றம் அவரை சிறைக்கு அனுப்பி வைத்தது.

மாணவர் கோரிக்கைக்கு இணங்கி தேர்வுகளை ரத்து செய்வதோ, பள்ளி மாணவர்களுக்கு பரிச்சயமில்லாத ஆன்லைன் தேர்வுகளை நடத்துவதோ, நடைமுறையில் சாத்தியமில்லை என கல்வித் துறை அதிகாரிகள் கைவிரித்துள்ளனர். ஆன்லைன் தேர்வுக்கான கொள்குறிவகையிலான வினாத்தாள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை என்றும், கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதுவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மாணவர் போராட்டம் பரவாதிருக்க அவர்களையும், அவர்களது சமூக ஊடகச் செயல்பாடுகளையும் கண்காணிக்கும்படி பெற்றோருக்கு கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர் போராட்டத்தை தூண்டிவிட்டதாக கைதான விகாஸ் பதக் தங்கியிருந்த நட்சத்திர விடுதி மற்றும் இதர செலவினங்களின் பின்னணியில் வேறுசில அமைப்புகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில், அவை குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in