கரோனாவை விட வேகமாக பரவும் ‘லாக் டவுன்’ பீதி

வதந்திகளை களைய களமிறங்கியது, ‘பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ’!
கரோனாவை விட வேகமாக பரவும் ‘லாக் டவுன்’ பீதி

சீன தேசத்தை புரட்டிப்போடும் கரோனா திரிபின் அடுத்த அலை, இந்தியா உள்ளிட்ட இதர உலக நாடுகளிலும் ஊடுருவி உள்ளது. முந்தைய அலைகளின் கசப்பனுபவம் காரணமாக, இந்தியாவில் கரோனாவைவிட ’லாக் டவுன்’ பீதி வேகமாக பரவி வருகிறது.

அப்படி பரவும் தகவல்களில் எது செய்தி, எது வதந்தி என்பதை பிரித்து மக்களுக்கு சொல்லும் முயற்சிகளும் தனியாக தொடங்கப்பட்டுள்ளன.

’நான்காவது அலைக்கு இந்தியா ஆளாகிவிட்டதா’ என்பதுதான் இந்தியர்கள் மத்தியிலான இந்த நிமிடத்தின் ஐயமாகவும் நீடிக்கிறது. முந்தைய மோசமான அனுபவங்கள் மற்றும் அவற்றிலிருந்து மீண்ட பாடங்கள் இந்தியாவுக்கு உண்டு என்பதால், கரோனா பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் தவிர்ப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்களுக்கு அப்பால் மாநில அரசுகளும் தத்தம் சூழல்கள் மற்றும் சவால்களுக்கு ஏற்ப கரோனா முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் மும்முரமாக உள்ளன. அரசுகளின் அறிவிப்புக்கு முன்பாகவே பொதுமக்கள் மத்தியிலும் சுதாரிப்புகள் தென்படுகின்றன.

இவற்றுக்கிடையே பீதிகளுக்கும் குறைவில்லை. ’எக்ஸ்பிபி’ என்ற கரோனா திரிபை முன்வைத்து, ’வாட்ஸ் அப் பல்கலைக்கழக’த்தின் வெட்டி பிரதிநிதிகள் கிளப்பிய பீதி சில தினங்கள் முன்பாக இந்தியர்களை படுத்தி எடுத்தது. மத்திய சுகாதார அமைச்சகமே தலையிட்டு, அந்த தகவல் போலியானது என மக்களை சாந்தப்படுத்த வேண்டியதாயிற்று.

ஆங்காங்கே ’பிஎஃப்.7’ திரிபு காரணமாக கரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வரவே, அவற்றை முன்னிறுத்தியும் புதிய பீதி ஒன்று கிளப்பப்பட்டது. ’பாரத் லாக் டவுன்’ என்ற பெயரிலான இந்த போலி தகவல், ’கரோனா பரவலின் நான்காம் அலைக்கு இந்தியா ஆளானதை அடுத்து பிரதமர் மோடி நாடு தழுவிய லாக் டவுன் அறிவித்துள்ளார்’ என்று பதட்டம் பரப்புகிறது. முதல்கட்டமாக 7 நாட்களுக்கு அமலாகும் இந்த லாக் டவுன், தொடர்ந்து நீட்டிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் அந்த தகவல் பீதி கிளப்பியுள்ளது.

கரோனா பரவலைவிட, அதற்கு எதிரான லாக் டவுன் நடவடிக்கைகளே சாமானியர்களை அதிக பதட்டத்துக்கு ஆளாக்குபவை. இந்தியா மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும், கோவிட் கட்டுப்பாட்டுக்கான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சமகால உதாரணமாக ’ஸீரோ கோவிட்’ என்ற இலக்கில் சீன அரசு விதித்த கட்டுப்பாடுகள், மக்களின் தொடர் போராட்டங்களால் வாபஸ் பெறப்பட்டதை சொல்லலாம்.

இந்த வரிசையில் இந்தியாவிலும், குறிப்பாக வட மாநிலங்களை குறிவைத்து ‘லாக் டவுன்’ பீதி கிளம்பியது. ஒரு சில இந்தி ஊடகங்களின் பெயரில் போலியாக சித்தரிக்கப்பட்ட அறிவிப்புகள் மக்களை அலைகழித்தன. தனி நபர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு அப்பால் அரசே களமிறங்கி வதந்திகளை மோப்பமிட தொடங்கியிருப்பதால், இந்த லாக் டவுன் பீதி குறித்து ’பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ’, தானாக முன்வந்து விளக்கம் தந்துள்ளது. அதன்படி லாக் டவுன் பெயரிலான தகவல், பொய்யானது என சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அரசின் அறிவிப்புகள் மற்றும் கொள்கை முடிவுகள் தொடர்பாக, மக்கள் மத்தியில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை அடையாளம் கண்டு குடிமக்களை எச்சரிக்கும் பணிக்காக ’பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ - ஃபேக்ட் செக்’ என்ற ட்விட்டர் ஹேண்டில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கோவிட் தொடர்பாக பொதுவெளியில் பரவும் ஒரு தகவலின் உண்மை நிலையை அறிய, +918799711259 என்ற எண்ணிலும், https://factcheck.pib.gov.in/ என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் தேவையான விளக்கங்களை பெற முடியும். மேலும் தங்கள் வசமுள்ள புகார்களையும் தெரிவிக்க முடியும். http://t.me/PIB_FactCheck என்ற டெலகிராம் குழுவில் இணைந்தும் தொடர்பில் இருக்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in