சர்வதேச எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்தியாவை ‘பின்தொடரும்’ பாகிஸ்தான்!

எரிபொருள்
எரிபொருள்

இந்தியாவுடன் சதா பகைமை பாராட்டும் பாகிஸ்தான், சர்வதேச எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், ஒரு விஷயத்தில் இந்தியாவை பின்பற்றத் தொடங்கியிருக்கிறது.

பாகிஸ்தான் தேசம் மிக மோசமான பொருளாதார சீரழிவுக்கு ஆளாகி வருகிறது. அடுத்து வரும் மாதங்கள் பாகிஸ்தான் சரிதத்தில் மிகவும் சவாலான காலமாக பதிவு செய்யப்பட இருக்கின்றன. உணவு மற்றும் எரிபொருள் செலவினங்கள் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை வெகுவாய் தற்போது அச்சுறுத்தி வருகின்றன. இதிலிருந்து தப்பிக்கும் உபாயமாக, இந்தியாவை பின்பற்ற முடிவு செய்திருக்கிறது பாகிஸ்தான்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த்தாக்குதலை அடுத்து மேற்கு நாடுகள் சகல வழிகளிலும் தங்களை ரஷ்யாவிடமிருந்து துண்டித்து வருகின்றன. அவற்றில் முக்கியமாக, ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்தின. இவை ரஷ்ய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், சர்வதேச சந்தைவிலையைவிட தனது கச்சா எண்ணெய் விலையை ரஷ்யா வெகுவாய் குறைத்து அறிவித்தது. ஆனபோது ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்தன.

இதனிடையே ரஷ்யாவின் நட்பு தேசமான இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க முன்வந்தது. சர்வதேச மதிப்பைவிட ரஷ்யாவில் விலை குறைவு என்பதால், வாங்கும் அளவையும் அதிகரித்தது. உக்ரைன் போருக்கு முன்னதாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 1%க்கும் குறைவாகரஷ்யாவை எதிர்பார்த்திருந்த இந்தியா, தற்போது அதனை 35%க்கும் மேலாக உயர்த்தியது.

அமெரிக்காவின் கைப்பாவையாக இருக்கும் பாகிஸ்தான், நீண்ட தயக்கத்துக்கு பின்னரே, கச்சா எண்ணெயில் இந்தியாவை பின்தொடர ஆயத்தமானது. அமெரிக்கா மட்டுமன்றி, கச்சா எண்ணெய் வழங்கலில் பிரதான சந்தையான வளைகுடாவின் இஸ்லாமிய நாடுகளின் அதிருப்தியையும் இதனால் பாகிஸ்தான் சம்பாதிக்க ஏதுவாகும். ஆனபோதும், தற்போதைய பொருளாதார சரிவின் மத்தியில் தான் எடுத்திருக்கும் முடிவை இஸ்லாமிய நாடுகள் புரிந்துகொள்ளும் என பாகிஸ்தான் நம்புகிறது.

ரஷ்யாவிடமிருந்து பாகிஸ்தான் கச்சா எண்ணெய் வாங்குவது உறுதியாகி உள்ள நிலையில், கச்சா எண்ணெய் பீப்பாய் 50 அமெரிக்க டாலருக்கு வழங்கப்பட உள்ளது. சர்வதேச சந்தை மதிப்பில் பீப்பாய் விலை தற்போது சுமார் 83 அமெரிக்க டாலராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in