கண்டிப்பு காட்டிய டீச்சரை துப்பாக்கியால் சுட்ட ஒன்றாம் வகுப்பு மாணவன்!

அமெரிக்காவை படுத்தும் துப்பாக்கி கலாச்சாரம்
கண்டிப்பு காட்டிய டீச்சரை துப்பாக்கியால் சுட்ட ஒன்றாம் வகுப்பு மாணவன்!

வகுப்பில் கண்டிப்பு காட்டிய ஆசிரியை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒன்றாம் வகுப்பு மாணவனின் செயல் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் பரவும் துப்பாக்கி கலாச்சாரத்தை எச்சரிக்கும் விதமாய், அவ்வப்போது அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தனிப்பட்ட பாதுகாப்புக்காக பெரியவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை எப்படியோ எடுத்துவரும் மாணவர்களில் சிலர், பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்துவது அடிக்கடி அங்கே செய்தியாகும். அவர்களின் மத்தியில் 6 வயது சிறுவன் ஒருவன் வகுப்பறையில் துப்பாக்கி ஏந்தியது அமெரிக்கர்களுக்கு அப்பால் உலகம் முழுமைக்குமே அதிர வைத்திருக்கிறது.

அமெரிக்காவின் கிழக்கு மாகாணமான விரிஜீனியாவின் நியூபோர்ட்ஸ் நகரில் இந்த சம்பவம் இன்று அரங்கேறி இருக்கிறது. ஒன்றாம் வகுப்பில் பயிலும் மாணவனை அவனது ஆசிரியை ஒருவர் கண்டித்ததும், அதைத்தொடர்ந்து இருவர் இடையிலான வாக்குவாதம் நடைபெற்றதும் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னதாக வகுப்பில் நடந்திருக்கின்றன.

வாக்குவாதத்தின் ஒரு கட்டத்தில், பைக்குள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்த 6 வயது சிறுவன் ஆசிரியை நோக்கி சுட்டான். மிகவும் அருகிலிருந்த சுட்டதில், குண்டடி பட்ட ஆசிரியை அங்கேயே சுருண்டு விழுந்தார். அமெரிக்க பள்ளிகளில் பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அங்கமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றுவதும் அடங்கும். எனவே துப்பாக்கிச் சூடு சத்தம் எழுந்ததும், அந்த வகுப்பு உட்பட பள்ளியின் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாகத்தில் உள்ள ஜிம்னாசியம் அரங்கில் ஒளிந்து கொண்டனர்.

விரைந்துவந்த போலீஸார் சிறுவன் வசமிருந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றினர். சம்பவம் குறித்த முதல் கட்டத் தகவல்கள், மாணவன் கையிலிருந்த துப்பாக்கி வெடித்ததை விபத்துக்கு நிகராக வர்ணித்தன. ஆனால் போலீஸாரின் விசாரணையில் 6 வயது சிறுவன், தனது டீச்சர் மீதான கோபத்தில் திட்டமிட்டு கைத்துப்பாக்கியை எடுத்து வந்ததும், வாக்குவாதத்தின் மத்தியில் அதனை பிரயேகித்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து போலீஸார் அந்த ஒன்றாம் வகுப்பு சிறுவனை ‘கைது’ செய்துள்ளனர். பள்ளிக்கு திங்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறுவன் கைக்கு துப்பாக்கி சேர்ந்த விதம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவின் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு அடுத்த தலைமுறையினர் இரையாவதற்கு எதிராக அங்கே மீண்டும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன.

இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 வயது ஆசிரியையின் உயிருக்கு அச்சுறுத்தலாக குண்டு பாய்ந்திருப்பினும், தற்போதைக்கு மருத்துவக் கண்காணிப்பில் அவர் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in