அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைப்பு: பாகிஸ்தான் நிர்க்கதி!

உணவுப்பொருட்களுக்கு கையேந்தும் பாக். மக்கள்
உணவுப்பொருட்களுக்கு கையேந்தும் பாக். மக்கள்

பொருளாதார சீரழிவுக்கு ஆளாகியிருக்கும் பாகிஸ்தானில் ஊதியம் உள்ளிட்ட சகல பில்களுக்கும் தடை விதித்து அரசு அதிகாரபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

வரலாறு காணாத பணவீக்கத்துக்கு பாகிஸ்தான் ஆளாகி இருக்கிறது. பாதாளத்தில் சரிந்த பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்த சர்வதேச நாணய நிதியத்திடம் பெருந்தொகை கடன் கேட்டுள்ளது பாகிஸ்தான். 1.1 பில்லியன் அமெரிக்க டாலருக்கான அந்த கடன்தொகை கையில் கிட்டும் வரை ஏராளமான கட்டுப்பாடுகளை அரசு கடைபிடித்து வருகிறது.

அவற்றில் ஒன்றாக சம்பளம் உள்ளிட்ட நிதி அமைச்சகத்தின் கீழான அனைத்து பில்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது. அடுத்த உத்தரவு வெளியாகும்வரை இந்த தடையே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை உலுக்கும் பொருளாதார சீர்கேடு எதுவானாலும், அரசு ஊழியராக இருப்பின் தப்பித்து விடலாம் என்பது பொதுவான வாதமாக இருக்கும். ஆனால் அந்த வாதத்தை செல்லாததாக்கி இருக்கிறது பாகிஸ்தானின் நிலைமை. திவால் நிலைமையை நோக்கி தேசம் செல்கிறது என்ற கணிப்புகளுக்கு மத்தியில், அது ஏற்கனவே அப்படியான நிர்க்கதி நிலையில்தான் உள்ளது என பாகிஸ்தான் அமைச்சர்களே சொல்லும் அளவுக்கு அங்கே சூழல் மோசமாகி உள்ளது.

பணப்புழக்கம் குறைவதன் மத்தியில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடும், கடும் பணவீக்கமும் நாட்டை அடுத்து ஆட்டிப்படைக்க இருக்கிறது. பயங்கரவாதம், எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஆகியவற்றுக்கு மத்தியில், சீர்படாத பொருளாதார சூழலால் பொதுமக்கள் மத்தியிலான கொந்தளிப்பு அபாயத்துக்கும் பாகிஸ்தான் ஆளாகி இருக்கிறது. இதன் மத்தியில் சம்பள பில்களுக்கும் தடை போடப்பட்டிருப்பது, நாட்டு மக்களின் கவலையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in