அமெரிக்கா - ரஷ்யா: பூமியில் மோதல்; விண்வெளியில் அரவணைப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள்

அமெரிக்கா, ரஷ்யா என 2 வல்லரசு தேசங்களும் பூமியில் மோதல் போக்கினைக் கொண்டிருந்தபோதும், சூழல் கருதி விண்வெளியில் ஒற்றுமையாக கைகோர்த்து செயல்படுகின்றன.

உக்ரைன் விவகாரத்தை முன்வைத்து வல்லரசு தேசங்களான அமெரிக்கா - ரஷ்யா இடையே கடும் உரசல் நிலவி வருகிறது. இந்த தகிப்பு எந்த சூழலிலும் அடுத்த உலகப்போருக்கு வித்திடக்கூடும் என்ற சூழலையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இருவருக்குமே பொதுவான சவால் எழுந்தால், 2 வல்லரசு தேசங்களும் இணைந்து செயல்படும் என்பதை விண்வெளியில் நிரூபித்துள்ளன.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 ரஷ்யர்கள் மற்றும் 1 அமெரிக்கர் தங்கி பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பூமிக்கு திரும்பவதற்கான சோயுஸ் விண்கலம் திடீர் பாதிப்புக்கு ஆளானதால், 2 நாடுகளும் கூடிப் பேசி உரிய நடவடிக்கைக்கு இணங்கி வந்துள்ளன.

அதன்படி புதிய சோயுஸ் விண்கலத்தை பிப்.24 அன்று ரஷ்யா விண்ணுக்கு ஏவ உள்ளது. ஆளின்றி செல்லும் அந்த விண்கலத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தின் 3 வீரர்களும் பூமிக்கு திரும்புவார்கள். முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ’சோயுஸ் -எம்எஸ் 22’ என்ற விண்கலம், பூமிக்கு திரும்புவதற்கான தகுதியை இழந்திருந்தது. புவியின் வளிமண்டல எல்லைக்குள் விண்கலம் பிரவேசிக்கையில் கல்பனா சாவ்லாக்கு நேர்ந்தது போன்ற விபத்துக்கு விண்கலம் ஆளாகும் ஆபத்து காத்திருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் மற்றும் அமரிக்காவின் நாசா அதிகாரிகள் கலந்து பேசியதன் அடிப்படையில் ’சோயுஸ் -எம்எஸ் 23’ விண்கலம் விரைவில் விண்ணுக்கு பாய்கிறது.

இந்த வகையில் உலகின் இருபெரும் வல்லரசுகள் தமக்குள் மோதல் போக்கினைக் கொண்டிருந்தபோதும் பொதுவான சவால்களை இணைந்து எதிர்கொள்வது வரவேற்பு பெற்றிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in